150 ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த மாதேஸ்வரன் என்ற தபால்காரரையும், சமகாலத்தில் வாழும் காளி என்ற தபால்காரரையும் ஒரே கதையில் இணைத்து, அஞ்சல்துறைக்கும் தபால்காரர்களுக்கும் மரியாதைச் செலுத்த முயல்கிறது இந்த `ஹர்காரா’.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகிலிருக்கும் கீழ்மலை எனும் மலைக் கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் ஒற்றை ஆளாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் தபால்காரர் காளி. அப்பாவி கிராமத்தினரின் தொல்லைத் தாங்காமல், போன் சிக்னல் கூட கிடைக்காத அக்கிராமத்திலிருந்து மாற்றுதலாகி வேறு பணியிடம் செல்லப் படாத பாடுபடுகிறார்.

ஹர்காரா படத்தில்…

இந்நிலையில், மலையுச்சியில் உள்ள கிராமம் ஒன்றுக்குத் தபால் கொடுக்க மலையேறும் காளிக்குப் பேச்சுத் துணையாக மலைவாசி ஒருவர் வருகிறார். மலைவாசிகள் தெய்வமாக வணங்கும் ‘மாதேஸ்வரன்’ என்கிற 150 ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த ‘ஹர்காரா’வின் (தபால்காரர்) கதையைச் சொல்லத் தொடங்குகிறார் அந்த மலைவாசி. தபால்காரர் மாதேஸ்வரன் எப்படி மலைவாசிகளின் தெய்வமானார், மாதேஸ்வரனின் கதை, காளியின் வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது போன்றவற்றைப் பேசுகிறது அறிமுக இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோவின் ‘ஹர்காரா’.

நக்கல் பிடித்த கிராமத்தினரிடம் மாட்டிக்கொண்டு அல்லல்படும் இடங்களில் நன்றாக ஸ்கோர் செய்கிறார் காளி வெங்கட். சிரிக்க வைக்கத் தவறிய இடங்களில் கூட ரசிக்க வைத்தாவது விடுகிறார். உணர்ச்சிகரமான காட்சிகளிலும் தன் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஹர்காரா மாதேஸ்வரனாக நடித்திருக்கும் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ, தன் உடல்மொழியிலும், சண்டைக்காட்சிகளிலும் பெயர் பதிக்கிறார். ஆனால், உணர்வுபூர்வமான தருணங்களைப் பார்வையாளர்களுக்குக் கடத்த அவரின் நடிப்பு எந்தக் காட்சிகளிலும் உதவவில்லை. கதாநாயகியாக கௌதமி சௌதிரி சில காட்சிகளுக்கு மட்டும் தலைகாட்டுகிறார்.

‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், பாலு போஸ், அம்பேத், குலோத்துங்கன் ஆகியோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ‘லவ் பாய்’ ஆக பாலு போஸ் சில இடங்களில் நெகிழ வைக்கிறார்.

ஹர்காரா படத்தில்…

கீழ் மலை போன்ற மலைக்கிராமங்களில் வசிக்கும் மனிதர்களுக்கு ஒரு தபால்காரர், எப்படி ஒரு முக்கியமான தொலைத்தொடர்பு கருவியாக இருக்கிறார் என்பதைக் காளியின் கதை வழியாக அழுத்தமாகச் சொல்கிறார் இயக்குநர். ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மாதேஸ்வரன் கதை மூலமாகச் சொல்லப்படும் மெசேஜை இன்னும் அழுத்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்லியிருக்கலாம்.

நக்கலும் வெகுளித்தனமும் கொண்ட கிராமம் மக்கள் செய்யும் லூட்டிகளும், திருமணத்திற்குப் பெண் கிடைக்காத வேதனையோடு அம்மக்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் காளியின் கதையும் எதார்த்தமாகவும் நகைச்சுவையாகவும் சொல்லப்படுவதால் எளிதிலேயே படத்திற்கு நுழைந்துவிட முடிகிறது. கிராமத்தில் வாழும் சிறுசிறு கதாபாத்திரங்கள் அளவாகவும், அழகாகவும் எழுதப்பட்டு, ரசிக்க வைக்கின்றன.

ஆனால், மாதேஸ்வரனின் கதையை ஒரு சாகச வீரரின் கதையாகச் சொல்வதா அல்லது ஒரு நாட்டார் தெய்வத்தின் கதையாகச் சொல்வதா என்பதில் தொடக்கத்திலிருந்தே குழப்பம் இருக்கிறது. சுதந்திரத்திற்கு முந்தைய மலைக்கிராமம், அன்றைய அஞ்சல்துறை, மலைக்கிராமத்தில் காட்டு மிருகங்களுக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் பணி செய்யும் தைரியமான தபால்காரன், அவன் தனியாளாக நடையும் ஓட்டமுமாக ஓடி உருவாக்கிய காட்டுப்பாதை எனச் சுவாரஸ்யமான கதைக்களமாகவே தொடங்குகிறது மாதேஸ்வரனின் கதை.

ஹர்காரா படத்தில்…

ஆனால், சிறிது நேரத்திலேயே ஆங்கிலேய அதிகாரிகளின் அராஜகம், அவர்களை நம்பும் அப்பாவி கதாநாயகன், காதல், கல்யாணம், பிறகு நாட்டிற்காக உயிரையும் கொடுக்க முனைவது என வழக்கமான சுதந்திரப் போராட்ட பிளாஷ்பேக் பாணிக்குத் திரைக்கதை திரும்புகிறது. சில இடங்களில் சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், அவையாவும் யூகிக்கும்படியான திருப்பங்களாகவே இருக்கின்றன. நடிகர்களும் நாடக பாணியிலேயே பேசி நடிக்கிறார்கள். அதேபோல, மாதேஸ்வரன் பிளாஷ்பேக்கில் அவரை ஊர்மக்கள் ஏன் தெய்வமாகப் பார்க்கிறார்கள் என்பதற்கான காரணங்களும் அழுத்தமாக எழுதப்படவில்லை.

சமகாலத்தில் நிகழும் கதைக்களத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையை மட்டும் காட்டாமல், ஒரு பெருமலையின் அனைத்து வண்ணங்களையும் காட்சிப்படுத்தியதோடு, ஒரு மலைக்கிராமத்தை கண்முன் கொண்டுவந்திருக்கிறது பிளிப்ஸ் ஆர்.சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவு. அதேநேரம், பின்கதை காட்சிகளையும் தனித்துவமாக்கக் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பீரியட் செட்டப் என்பதால் வெறும் மணல் பரப்பில் மட்டும் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகளும் சுமார் ரகம்தான்.

பின்கதை காட்சிகளில் நிலவும் குழப்பத்தைப் படத்தொகுப்பாளர் டானி சார்லஸ் சரிசெய்திருக்கலாம். ‘பொய்யால பொய்யால’, ‘அஞ்சல்காரன்’ ஆகிய பாடல்களாலும், பின்னணியிசையாலும் படத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் ராம் சங்கர். சமகால காட்சிகளில் கலை இயக்குநர் வி.ஆர்.கே ரமேஷும், சுதந்திரத்திற்கு முந்தைய காட்சிகளில் சண்டைப் பயிற்சியாளர் ரன் ரவியும் கவனிக்க வைக்கிறார்கள்.

ஹர்காரா படத்தில்…

சமகால மலைக்கிராமத்திலும் 150 ஆண்டுகளுக்கு முந்தைய மலைக்கிராமத்திலும் அம்மக்களுக்கான பிரத்யேக பண்பாடு, பழக்கவழக்கம், தெய்வ வழிபாடு, தொழில் என எதுவும் காட்சிப்படுத்தப்படவில்லை. அதனால், சிக்னல் பிரச்னை, சாலை பிரச்னை போன்ற அரசியல் சிக்கல்கள் மட்டுமே நிழலாடுகின்றன. மேலும், கழுவேற்றம், சிதை ஏற்றுவது என பிளாஷ்பேக் கதையும் எங்கெங்கோ தறிகெட்டு ஓடுகிறது.

பிளாஷ்பேக் கதையில் தெளிவும் அழுத்தமும் இருந்து, வழக்கமான கிளிஷேவான போராட்டக் காட்சிகளையும் தவிர்த்திருந்தால் `ஹர்காரா’ மணி ஆர்டரில் வந்த பணமாக மகிழ்வை ஏற்படுத்தியிருக்கும். இப்போது சம்பிரதாய வாழ்த்து அட்டையாக மட்டுமே திருப்திப்பட்டுக் கொள்கிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: