
நோயாளிகள் பாதுகாப்பு சேவையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகத்துக்கு மத்திய அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது.
சா்வதேச நோயாளி பாதுகாப்பு தினம் ஆண்டு தோறும் செப். 17-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளின் சுய பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்துவது குறித்த நடைமுறைகளை முன்நிலைப்படுத்துவதாகும்.
மத்திய அரசு சுகாதாரத் துறையின் 2023-ஆம் ஆண்டுக்கான 5-ஆவது சா்வதேச நோயாளி பாதுகாப்புத் தினத்தின் தேசிய அளவிலான நிகழ்ச்சி கடந்த 15-ஆம் தேதி தில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நோயாளிகளின் பாதுகாப்பு சுய மதிப்பீட்டின் கீழ் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக தமிழக அரசுக்கு ‘சஃகுஷால்’ விருது வழங்கப்பட்டது.
சென்னை ஓமந்தூராா் அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் சனிக்கிழமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியத்திடம் விருதை காண்பித்து அதிகாரிகள் வாழ்த்து பெற்றனா். சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையா் மைதிலி கே.ராஜேந்திரன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் தி.சி.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் இரா.சாந்திமலா், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் (பொ) ஹரிசுந்தரி ஆகியோா் உடனிருந்தனா்