வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராய்ப்பூர் :”நாங்கள் கேட்டதையெல்லாம் எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் பிரதமர் மோடி செய்து கொடுத்துள்ளார். கேட்காததையும் அள்ளி அள்ளிக் கொடுத்துள்ளார்,” என, அரசு விழாவில், பிரதமர் மோடியை, காங்.,கைச் சேர்ந்த சத்தீஸ்கர் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ புகழ்ந்துள்ளார்.
சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு இந்தாண்டு இறுதியில் சட்ட சபை தேர்தல் நடக்க உள்ளது.
மாநிலத்தில், 6,400 கோடி ரூபாய் மதிப்புள்ள பல திட்டங்களை பிரதமர் மோடி இரண்டு நாட்களுக்கு முன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், காங்., மூத்த தலைவரும், துணை முதல்வருமான டி.எஸ். சிங் தியோ பேசியதாவது:
நீங்கள் இங்கு எங்களுக்கு நிறைய கொடுப்பதற்காக வந்துள்ளீர்கள். அதற்காக உங்களை வரவேற்கிறேன்.சத்தீஸ்கருக்கு நீங்கள் ஏற்கனவே பல திட்டங்களை கொடுத்துள்ளீர்கள். எதிர்காலத்திலும், இதுபோல் அள்ளி அள்ளி தருவீர்கள் என நம்புகிறேன்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, நாங்கள் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.
என்னுடைய இத்தனை ஆண்டு அரசியல் அனுபவத்தில், இதுபோன்று பாரபட்சம் இல்லாமல் மத்திய அரசு செயல்பட்டதை பார்த்ததில்லை.இந்த மாநிலத்துக்கு இது தேவை என்று மத்திய அரசிடம் கேட்டால், உடனே அதற்கு மறுப்பு தெரிவிக்காமல், நிதியை ஒதுக்கி தந்துள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால், மாநிலமும், நாடும் முன்னேறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement