சேலம்:

ஓமலூரை அடுத்த செக்காரப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 28). இவர் புளியம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சேலம்-ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களாக சொந்த வேலை காரணமாக சக்திவேல் தனது கடையை திறக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலை அவருடைய கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேலுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர் வந்து பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ. 1¼ லட்சம் மதிப்பிலான கேமரா, ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான கேமரா ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதேபோல் ஸ்டூடியோவுக்கு எதிரே உள்ள சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பேக்கரி கடையின் பூட்டை உடைத்து, அங்கிருந்த பொருட்கள் மற்றும் ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர். மேலும் அருகில் உள்ள மெக்கானிக் பட்டறை, மெத்தை மற்றும் தலையணை தயாரிக்கும் கடைகளிலும் திருட முயற்சி நடந்தது. இதுகுறித்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது முகத்தை மூடியபடி வந்த மர்ம நபர்கள் 2 பேர் ஸ்டூடியோ மற்றும் பேக்கரியில் திருடியதும், மற்ற 3 கடைகளில் திருட முயன்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-வீனித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: