1
பெங்களூரு: யஷ் நடிப்பில் ‘கேஜிஎஃப் 2’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இது, படம் கடந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி ரிலீசானது. இந்த சூழலில் இந்த படத்தின் அடுத்த பாகத்திற்கான அறிவிப்பை சூசகமாக வீடியோ மூலம் பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘பலம் கொண்டவனால் கொடுக்கப்பட்ட வாக்குறுதி அது. கேஜிஎஃப் 2 மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் நம்மை கலைத்துவமிக்க பயணத்தில் அழைத்துச் சென்றது. பல சாதனைகளை முறியடித்தது. மக்களின் இதயங்களை வென்றது. உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கதையிது’ என டிவிட்டரில் ஹோம்பலே பிலிம்ஸ் பதிவு செய்திருக்கிறது.
இந்த பதிவுடன் ஒரு வீடியோவையும் ஹோம்பலே பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ‘1978-81 வரை ராக்கி எங்கே இருந்தார்?’ என 3வது பாகத்திற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது பட நிறுவனம். கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 என இரண்டு படங்களும் சேர்ந்து பாக்ஸ் ஆபீசில் ரூ.1700 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. பாகுபலி, பாகுபலி 2 படங்களுக்கு இணையான வசூலாக இது உள்ளது. வரும் 28ம் தேதி வெளியாகும் பொன்னியின் செல்வன் 2, தனது முதல் பாகத்துடன் சேர்ந்து இந்த வசூலை முறியடிக்குமா என சினிமா வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.