விஜயநகரம் என்னும் ஹம்பி வரலாற்று வன்மையுடையது என்பது ஒருபுறமிருக்க, அவ்விடத்துக்குச் சிறப்பான இதிகாசப் பாங்கும் இருப்பதை நாம் அறிய வேண்டும். இதிகாசம் கூறுகின்ற பெருங்காண்டம் அவ்விடத்தில் நிகழ்ந்ததை அறிந்தால்தான் ஹம்பி பள்ளத்தாக்கு நமக்கு ஊட்டுகின்ற சிலிர்ப்பின் சில்லிப்பு வேறு தரம் என்பது விளங்கும்.

இந்தியத் திருநாட்டின் மாபெரும் இரண்டு இதிகாசங்கள் ராமாயணமும் மகாபாரதமும். இதில் ராமாயண நிகழ்வுகளோடு பெரிதும் தொடர்புடையது பம்பை நதிக்கரை – துங்கபத்திரை நதிக்கரை. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம் என ஏழு காண்டங்களை உள்ளடக்கியது ராமாயணம்.
காண்டம் என்பது ஒரு நூலின் இன்றிமையாத பெரும்பிரிவு. ராமாயணத் தில் ஆரண்ய காண்டத்துக்கு அடுத்து வருவது கிட்கிந்தா காண்டம். கிட்கிந்தை என்பது துங்கபத்திரை நதிக்கு வடகரையில் அமைந்துள்ள வானரர்களின் பகுதி. கிட்கிந்தையில் நிகழ்கின்றவற்றை விவரிக்கும் பகுதியே கிட்கிந்தா காண்டம். ராமாயணத்தில் குறிப்பிடப்படுகின்ற அதே பம்பை நதியும் கிட்கிந்தையும் சேர்ந்த பகுதிதான் பிற்காலத்தில் விஜயநகரமாக வளர்ந்து பேரரசுகளின் தலைநகரமாயிற்று.
ராமாயணத்தில் குறிப்பிடப்படும் பம்பை நதி, கேரளத்தில் ஓடுகின்ற பம்பை நதிதான் என்று கூறுவோர் உளர். ஆனால், கிட்கிந்தை வனமாய்க் கூறப்படுகின்ற இயல்புகள் துங்க பத்திரைப் பள்ளத்தாக் குக்கே உரியனவாய்க் காணப்படுவதால், அப்பகுதி இன்றைய ஹம்பியே என்ற முடிவுக்கு எளிதாய் வரலாம்.
ஆரண்ய காண்டத்தின் முடிவில் ராமன், சபரிக்கு வீடு பேற்றை அளிக்கையில் அவள் ஒரு குறிப்பைத் தருகிறாள். இங்கிருந்து தெற்காகச் சென்றால் கிட்கிந்தை என்ற வானரர் வாழ்பகுதி வருமென்றும், சீதையை மீட்டுத்தர அவர்கள் உனக்கு எல்லா வகையிலும் உதவியாய் இருப்பார்கள் என்றும் கூறுகிறாள். அதோடு ஆரண்ய காண்டம் முடிகிறது. அங்கிருந்து அல்லும்பகலுமாய் நடந்து வரும் ராமலக்குவனர்கள் பம்பை நதிக்கரையை அடைகிறார்கள்.
பம்பை நதிக்கரையில் பெருங்குளம் போன்ற ஒரு பகுதி அமைந்திருக்கிறது. குளமெங்கும் நிறைந்து ததும்பும் தெள்ளிய நீரில் தாமரை மலர்கள் மலர்ந்து சிரிக்க, அதன் கரையோரத்தில் யானைகளும் மான்களும் எண்ணற்ற வனவிலங்குகளும் நீர்குடித்து மகிழ்ந்திருந்தன. நெடுந்தொலைவு நடந்து வந்த களைப்பு தீருமட்டும் ராமர் அக்குளத்தில் நீராடினார். சீதையைப் பிரிந்திருந்த ஏக்கத்தில் தணலாய் வெம்பியிருந்த ராமரின் உடல் நீர்த்தடாகத்தில் இறங்கியபோது பழுக்கக் காய்ச்சிய இரும்பை நீரில் செலுத்தினாற் போல் கொதித்தடங்கியதாம். கிட்கிந்தை என்னும் அந்தப் பகுதியின் அரசன் சுக்ரீவன். அவனுடைய அணுக்கத் தோழன் அனுமன். சுக்ரீவனின் தமையன் வாலி. வாலியும் சுக்ரீவனும் அண்ணன் தம்பியர் எனினும் அரச பதவி படுத்தும்பாடு அவர்களையும் பிரித்து விடுகிறது.
முன்பொருமுறை மாயாவி என்னும் அரக்க னோடு போர்புரியும்பொருட்டு ஒரு குகைக்குள் வாலி சென்றுவிட, குகை வாயிலின் வெளியே தன் தமையனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான் சுக்ரீவன். நெடுநேரமாகியும் வாலி வராமையால் ஒருவேளை அவன் இறந்திருக்க வேண்டுமென்றும், அந்த மாயாவி குகையிலிருந்து வெளியே வந்தால் தன் உயிருக்கும் கேடு விளையுமோ என்றும் அஞ்சிய சுக்ரீவன் குகைவாயிலை பெருங்கற்களைக் கொண்டு மூடிவிட்டு வந்துவிடுகிறான். ஆனால், நீண்ட நெடும்போருக்குப் பின் அந்த மாயாவியைக் கொன்று திரும்பும் வாலி, குகைவாயில் அடைபட்டிருப்பதைக் கண்டு வெஞ்சினம் கொள்கிறான். தன் தம்பி அரச சுகங்களுக்காக இவ்வாறு செய்தான் எனக் கருதுகிறான்.
பெருவலிமை திரட்டி, குகைவாயிலை ஓங்கியுதைத்து வெளியே வந்த வாலி, சுக்ரீவனை விரட்டிவிட்டு அவன் ஆட்சியையும் அழகிய மனையாளையும் தன்வயமாக்கிக்கொள்கிறான். உயிருக்கு அஞ்சிய சுக்ரீவன் தன்னைச் சார்ந்தவர்களோடு `ரிஷ்யமுக பர்வதம்’ என்னும் மலைத்தொடரையடுத்த மாதங்க மலைக்கு வந்து சேர்கிறான். ரிஷ்யமுகபர்வதம் என்பது துங்க பத்திரையின் வடகரை. இந்த மாதங்க மலைதான் ஹம்பியில் இன்றும் நடுநாயகமாக இருக்கக்கூடிய மலை. மாதங்க மலையிலிருந்து அந்தப் பள்ளத்தாக்கை முழுவட்டக் கோணத்தில் துலக்கமாகப் பார்க்கலாம். அம்மலையிலிருந்து எழுஞாயிற்றையோ (உதயம்) படிஞாயிற்றையோ (அஸ்தமனம்) காண்பது கண்கொள்ளாக்காட்சி.
துங்கபத்திரை நதியானது அந்த மலைகளுக் கிடையே பாறைகளை உடைத்துக்கொண்டு தானாக ஒரு வழியை உருவாக்கியபடி பாய்கிறது. அதனால் அங்கங்கே பெருங்குளங்களாய்த் தேங்கித் தேங்கிச் செல்லும். மாதங்க மலையை ஒட்டித்தான் துங்கபத்திரை பாய்கிறது. அந்த இடத்தில் ஓர் அகன்ற குளத்தை உருவாக்கி அது நிரம்பிய பிறகே வழிந்து நகரும். ராமன் நீராடிய ‘பம்ப தீர்த்தம்’ அந்தப் பகுதியாகத்தான் இருக்க வேண்டும். இங்கே கூறுவனவற்றையெல்லாம் கூகுள் செயற்கைக்கோள் வரைபடத்தில் துல்லிய மாகச் சரிபார்க்கலாம்.

நீராடி முடித்த ராமலக்குவனர்கள் தமக்கு உதவக்கூடிய வானரர் தலைவனைத் தேடி வருகின்றனர். வில்லம்புகளோடு வலியவர்களாய் வரும் இவர்களை மாதங்க மலையிலிருந்து கண்ட சுக்ரீவன் அஞ்சி நடுங்குகிறான். தன்னைக் கொல்வதற்குத் தன் தமையன் அனுப்பிய கொலைஞர்கள் வருகிறார்களோ என்பது அவன் அச்சம். அவர்கள் யாரென்று கேட்டுவரும்படி அனுமனை அனுப்புகிறான் சுக்ரீவன்.
கவர்ந்து செல்லப்பட்ட சீதையைத் தேடியவாறு அவர்கள் வந்துள்ளனர் என்பதையுணர்ந்த சுக்ரீவன் தாம் கண்ட காட்சியைக் கூறுகிறான். வான்வழியாய்க் கடத்திச் செல்லப்பட்ட ஒரு பெண் தன்னிடமிருந்த ஆபரணத்தையும் துகிலையும் வீசிச் சென்றதைக் கண்டதாகவும், அதைக் காப்பு செய்து ஒரு குகைக்குள் ஒளித்து வைத்திருப்பதாகவும் கூறுகிறான். ராமனின் வேண்டுகோளின்பின் ஒரு குகைக்குள் சென்று அந்தத் துகிலையும் ஆபரணத்தையும் எடுத்து வந்து காட்டுகிறான். அது சீதைக்குரியது என்பதை ராமன் கண்டுகொள்கிறான். சீதையின் ஆபரணத்தை ஒளித்து வைத்த அந்தக் குகை இன்றும் ஹம்பியில் இருக்கிறது.
ராமலக்குவனர்களின் துணைவலிமையால் வாலியைப் போருக்கழைக்கிறான் சுக்ரீவன். பெரும்போர் நடக்கிறது. ராமன், வாலியை வதம் செய்கிறான். கொல்லப்பட்ட வாலியின் உடல் மிகப்பெரிய மரியாதையுடன் பெரும்மேடையில் எரியூட்டப்படுகிறது. வாலியின் உடல் எரியூட்டப் பட்ட இடம் என்று `நிம்பபுரம்’ என்னும் பகுதியைக் குறிப்பிடுகிறார்கள். நிம்பபுரத்தில் செவ்வக வடிவத்தில் ஒரு மலைக்குன்று, பெரிய மேடையைப் போன்று திகழ்வதைச் செயற்கைக்கோள் வரைபடம் காட்டுகிறது. மேலை நாடுகளில் வரலாற்றுத் தடயங்களை அறிவதற்குத் தொலைச் சொடுக்கியில் இயக்கப்படுகின்ற, பறக்கும் படப்பிடிப்புக் கருவியைப் பயன்படுத்துகிறார்கள். புதைந்து கிடக்கும் மதிலின் அடித்தளத்தைக் கண்டுபிடித்தால் அதன் தொடர்ச்சி இன்னோர் இடத்தில் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பதை அத்தகைய பறவைப் பார்வையால்தான் அறியமுடியும். ஹம்பி பள்ளத்தாக்கின் மலைக் குன்றுகளை அவ்வாறு ஆராய்ந்தால் எண்ணற்ற தடயங்கள் காணக் கிடைக்கும்.
வாலியை வென்று சுக்ரீவனை அரசனாக்கியதும் சீதையைத் தேடி அனுமன் தெற்காகச் செல்கிறான். அவன் வரும்வரையில் ராமன் துயருற்று அமர்ந்திருந்த இடம் ‘மால்யவந்த’ மலைப் பகுதியாகும். ஹம்பியின் கிழக்குப்புறத்தில் உள்ள பெரிய மலை அதுதான். சீதையைத் தேடிச்சென்ற அனுமன் கணையாழியைப் பெற்று வந்து ராமனிடம் காட்டுகிறான். அதன்பிறகு சுக்ரீவன் பெரும்படையைத் திரட்டித் தருகிறான். ராமசேனை தெற்கு நோக்கிக் கிளம்புகிறது.
– தரிசிப்போம்…