தேனி:ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு, 2 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக கூறி, 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த மூவரை, புதுச்சேரி சிறையில் இருந்து போலீஸ் காவல் எடுத்து, தேனி சிறையில் அடைக்கப்பட்டனர்.
விருதுநகர், சிங்கராஜகோட்டை, பெரியவீதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் விக்னேஷ், 33. இவர், 2022 டிசம்பரில் தன் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து முகநுாலில் விளம்பரம் செய்தார்.
புகார்
இதைப்பார்த்த சென்னையைச் சேர்ந்த செல்வராஜ், ‘குறைந்த வட்டியில், 2 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக கூறி, அதற்காக 2 சதவீத கமிஷன், 10 சதவீத ஆவண கட்டணம் வழங்க வேண்டும்’ என்றார்.
அதன்படி, ஜன., 30ம் தேதி மாலை, 6:00 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகம் முன் விக்னேஷிடம், செல்வராஜ் அனுப்பியதாக கூறி, திருப்பூர் வாவிபாளையம் குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த இளங்கோவன், பணத்தை தர கோரினார்.
பார்த்திபன், சுந்தர் என்பவர்கள் உடன் வந்தனர். விக்னேஷ், 20 லட்சம் ரூபாயை இளங்கோவனிடம் வழங்கினார். பின், இளங்கோவன், பார்த்திபன், சுந்தர் ஆகிய மூவரும் ஆவணம் எடுத்து வருவதாக கூறி தேனி கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றனர்; திரும்பவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விக்னேஷ், தேனி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், செல்வராஜ், இளங்கோவன், பார்த்திபன், சுந்தர் உட்பட நால்வர் மீது மோசடி வழக்கு பதிந்தனர்.
கொரோனா
இதில், செல்வராஜ் தவிர மற்றவர்களை வேறு ஒரு வழக்கில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, மாவட்ட தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்தனர். நீதிபதி லலிதாராணி அனுமதி அளித்ததால், மூவரையும் கைது செய்து தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
மருத்துவ பரிசோதனையில் சுந்தர், பார்த்திபனுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவான செல்வராஜை தேடி வருகின்றனர்.