
ஜி.வி.பிரகாஷ், தரண் குமார் கூட்டணியின் பாடல்களில் எந்தப் புதுமையும் இல்லை. காதல், அப்பா சென்டிமென்ட், அம்மா சென்டிமென்ட் என எந்தப் பாடலும் மனதில் நிற்கவில்லை. அஃப்ரோ இசையில் முதல் பாடலாக வரும் ‘ஜொர்தாலயா’ பாடல் மட்டும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையில் சாம் சி.எஸ் இரண்டாம் பாதிக்கு வலுசேர்த்திருக்கிறார். கலர் ஃபுல்லான முதல் பாதிக்கும், விறுவிறுப்பான இரண்டாம் பாதிக்கும் தேவையான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர். ஆனால், அவரின் முத்திரைக் காட்சிகள் ஒன்றுகூட இல்லை. அப்பட்டமாகத் தெரியும் சி.ஜி. உருவாக்கத்திலான ‘வெளிநாட்டு’ காட்சிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். முதற்பாதியில் தவறவிட்ட பணியை இரண்டாம் பாதியில் ஓரளவிற்குச் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆண்டனி. பலவீனமான திரைக்கதை கைவிட்ட இடங்களை தன் படத்தொகுப்பால் சரி செய்ய முயன்றிருக்கிறார்.




வீட்டிற்குச் செல்லப் பிள்ளையான துடிப்பான கதாநாயகன், கருணை வடிவான கதாநாயகி, கதாநாயகனின் கண்டதும் காதல், ஓப்பனிங் சாங், கதாநாயகியைப் பார்த்த மூன்றாவது காட்சியில் டூயட், அதிரடி ஆக்ஷன், வில்லனின் அடியாட்களை ஸ்கெட்ச் போட்டுக் கொல்லும் கதாநாயகனின் ஹீரோயிஸம், கதாநாயகனைத் தேடும் வில்லன் என எந்தப் புதுமையும் இல்லாமல், முழுக்க முழுக்க பழங்கால சினிமாவாகவே செல்கிறது முதற்பாதி. அயர்ச்சியான முதற்பாதியை முடிந்தளவிற்கு தன் வழக்கமான மேனரிசத்தால் காப்பாற்ற படாதப்பாடுபடுகிறார் ராகவா லாரன்ஸ். ஆனால், அந்த முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. கதாநாயகனின் குடும்பத்தைப் பற்றிய காட்சிகளும் பார்த்துப் பழகியதாகவே இருப்பதால், பார்வையாளர்கள் மனதில் பதியாமல், வெறும் காட்சிகளாகவே கடந்து செல்கிறது.