ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் சத்யராஜ், பாக்யராஜ், ராஜ் என்கிற மூன்று சேட்டைக்கார நண்பர்கள் ஊரில் லந்துச் செய்துகொண்டு திரிகிறார்கள். கதாநாயகன் பாக்யராஜின் காதலி இருக்கும் கோவை மாவட்டம் தலக்கரை கிராமத்தில், சாதி மறுப்பு காதல் திருமணம் செய்ய முயலும் நான்கு பேரை, தலையை வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்கிறது ஒரு பேய். இந்தப் பேயைப் பிடித்தே ஆக வேண்டும் என அலையும் கொடுமுடி இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தியும், காதலன் பாக்யராஜ் உட்பட மூன்று ராஜ்களும் சேர்ந்து அந்தப் பேயைப் பிடித்தார்களா, ராஜின் காதல் வென்றதா, பேயால் கொல்லப்பட்டவர்கள் யார், பேயின் பின்கதை என்ன, நல்ல பேயா கெட்ட பேயா எனப் பல கேள்விகளுக்குச் சிரிப்பே வராத காமெடி டிராக்குகளாலும், இழுவையான பின்கதையாலும் பதில்கள் சொல்கிறார் இயக்குநர் அருண் கார்த்திக்.

ரிப்பப்பரி விமர்சனம்

கதாநாயகன் ‘மாஸ்டர்’ மகேந்திரன் நடனத்தில் மட்டும் ஜொலிக்கிறார். மற்றபடி ஒவ்வொரு ப்ரேமிலும் செயற்கையாக நடித்துத் தள்ளியிருக்கிறார். கடைசி வரை இயல்பாக நடிக்க அவர் கொஞ்சமும் முயலவில்லை என்பது பெரும் சோகம். மற்ற ராஜ்களாக வரும் மாரியும், நோபிள் ஜேம்ஸும் மகேந்திரனுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள். கதாநாயகியாக ஆரத்தி பொடி வருகிறார், போகிறார், அவ்வளவே! பேயாக வரும் ஶ்ரீனி மட்டும் ஆறுதல் தருகிறார். கதாநாயகனுக்குத் தொல்லை தர வரும் ‘உண்மை காதலன்’ கதாபாத்திரம் தன் உடல்மொழி, வார்த்தை உச்சரிப்பால் தனிக்கவனம் பெறுகிறது. சில இடங்களில் அவர் சிரிக்கவும் வைக்கிறார். இவர்கள் தவிர இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தியாக வரும் செல்லா, நக்கலைட்ஸ் தனம் எனப் பலரும் எவ்வித தாக்கத்தைத் தராமல் கடந்து போகிறார்கள். இந்தக் கூட்டத்தில் பிளாஷ்பேக்கில் வரும் காவ்யா அறிவுமணி மட்டும் தன் நடிப்பால் கவர்கிறார்.

இப்போது புழக்கத்திலேயே இல்லாத குரங்கு பொம்மை, நாய், கால் இல்லாமல் அந்தரத்தில் தொங்கும் பேய் போன்றவற்றை வைத்து நம்மைப் பயப்படுத்தப் பெரும்பாடுபடுகிறார் இயக்குநர். பேயின் கொடூர கொலைகள் ஒருபக்கம் இருந்தாலும், முதற்பாதி முழுவதுமே ராஜ் கூட்டணியின் சேட்டைகளாலும், கதாநாயகனின் காதலால் அவர்களுக்கு நேரும் விசித்திரமான பிரச்னைகளாலுமே ‘கதை’ நகர்கிறது. இதை முழுக்கவே காமெடியாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால், இரண்டு ரீலுக்கு ஒரு முறைதான் சிரிப்பு வருகிறது. மற்ற நேரங்களில், ஜெலுசில் வாங்கி குடிக்காத குறையாக எரிச்சலே வருகிறது. முதற்பாதியில் வரும் மொத்த காமெடியையும் டிக்கெட்டின் பின்புறம் உள்ள காலி இடத்திலேயே எழுதிவிடலாம். அவ்வளவு சிக்கன காமெடி!

ரிப்பப்பரி விமர்சனம்

இடைவேளையில் ஒருவழியாகக் கதைக்குள் நகரத் தொடங்குகிறது படம். மிகப்பெரிய இரண்டாம் பாதியை பேயின் பின்கதையால் நிறைத்திருக்கிறார்கள். அந்தப் பின்கதையில், காதல், குடும்ப பாசம், நட்பு, சாதி பிரச்னை, பாலியல் வன்கொடுமை, துரோகம், பழிவாங்கல், ஆன்மிகம் என தூத்துக்குடி துறைமுகம் போகும் சரக்கு ரயில் போல எண்ண முடியாத அளவு பெட்டிகளுடன் திரைக்கதைப் பயணிக்கிறது.

நிதானமில்லாமல் போகும் மான்டேஜ் காட்சிகளாலும், மிகையான நம்பகத்தன்மை இல்லாத திருப்பங்களாலும் பின்னப்பட்ட பின்கதை, எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அழுத்தமாக, உணர்ச்சிகரமாக ஒரு பின்கதை வேண்டும் என்றால், அதற்குக் கூட்டுப் பாலியல் வன்கொடுமையை சமூகப் பொறுப்பற்ற முறையில் விகாரமான காட்சிகளாலும் வசனங்களாலும் காட்டினால் போதும் என்ற வழக்கமான தவறான பார்முலாவையே இயக்குநர் கையாண்டிருக்கிறார். இப்படியான பின்கதையை ஒரு வழியாகத் தாண்டினால் மீண்டும் ராஜ் கூட்டணி கதையில் பிரவேசிக்கிறது. மீண்டும் அதே சிரிப்பு வராத காமெடிகள் டிராக்குகள் திரையை ஆக்கிரமிக்கின்றனர். இதன் உச்சமாக, இறுதிக்காட்சியில், தேவையில்லாமல் ‘பூவே உனக்காக’ விஜய் ரெஃபரன்ஸை வலிந்து திணித்திருக்கிறார்கள்.

மொத்த படத்தையும் தனி ஆளாகத் தாங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் திவாகர தியாகராஜன். படம் முழுவதும் வரும் பாடல்கள் மட்டுமே பார்வையாளர்களுக்குக் கொஞ்சம் ஆறுதல் தருகின்றன. இந்தப் படத்தின் ஆட்டநாயகனாக இருப்பதும் பின்னணி இசைதான். காமெடி கவுன்ட்டர்கள், லாஜிக் மீறல்கள், அழுத்தமில்லாத காட்சிகள் என மொத்த திரைக்கதையும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும்போது, பின்னணி இசை மட்டுமே படத்திற்கும் நமக்கும் கைகொடுக்கிறது.

ரிப்பப்பரி விமர்சனம்

அடுத்தபடியாக ஜொலிப்பது ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம். கொங்கு மண்டலத்தின் ஒரு கிராமத்தைத் திரையில் விரிக்கும் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் முயற்சி, பேச வைக்கிறது. ஆனால், இரவு நேர ‘பேய் விஜயங்களில்’ இன்னும் மெனக்கெட்டு டெரர் காட்டி மிரட்டியிருக்கலாம். மொத்தப் படத்தையும் படத்தொகுப்பாளர் முகேன் வேல் மீண்டும் ஒருமுறை எடிட் செய்யலாம் என்ற வகையிலேயே காட்சிகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, இரண்டாம் பாதியில் டிரெய்லரில் இருந்த இரண்டு நிமிட சுவாரஸ்யம்கூட இல்லை.

“சாதி மாறிக் காதலிப்பவர்களை ஒரு பேய் கொடூரமாகக் கொலை செய்கிறது. அப்பேயைக் கண்டுபிடிக்க ‘யூடியூப் சமையல் சேனல்’ நடத்தும் சேட்டைக்கார நண்பர்கள் களமிறங்குகிறார்கள்” என்று காமெடியில் கல்லா கட்ட வேண்டிய ஒன்லைனை வைத்துக்கொண்டு, மொக்கையான ஒரு டஜன் காமெடிகளாலும் நம்பகத்தன்மையே இல்லாத அபத்தமான பின்கதையாலும் பார்வையாளர்களைப் பதம் பார்த்திருக்கிறது இந்த `ரிப்பப்பரி’.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *