அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், 18,000-க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சவுத்ஃபோர்க் பால் பண்ணையில் செவ்வாய்கிழமையன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. பண்ணையை வைத்திருக்கும் குடும்பத்தினரும் இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
காஸ்ட்ரோ கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் (The Castro County Sheriff”s Office) அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், பண்ணையில் தீ விபத்துக்குள்ளான புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. அதோடு, எரிந்து கொண்டிருந்த கட்டடத்திற்குள் ஒருவர் சிக்கிக் கொண்டதாகவும், அவரின் இடத்தை கண்டறிந்து தீயணைப்பு வீரர்கள் மீட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
பண்ணைக்கு இட்டுச் செல்லும் அனைத்து சாலைகளும் பொது மக்களின் நலனுக்காகவும், பாதுகாப்பிற்க்காகவும் மூடப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டில் இருந்தே இது போன்ற பண்ணை தீ விபத்துகளைக் கவனித்து வரும் விலங்கு நல வாரியம் (Animal Welfare Institute), பண்ணை தீயில் சிக்கி விலங்குகள் இறப்பதைத் தவிர்க்க அமெரிக்காவின் கூட்டாட்சி சட்டங்களைக் கோரியுள்ளது.
இந்நிலையில், கடந்த பத்தாண்டுகளில் சுமார் 6.5 மில்லியன் பண்ணை விலங்குகள் தீ விபத்தால் இறந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கோழிகள் எனக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் பண்ணையில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தாக இது பார்க்கப்படுகிறது.