திருச்சியில் ஏப்ரல் 24-ம் தேதி ஓ.பி.எஸ் தலைமையில் முப்பெரும் விழா மாநாடு நடைபெறவிருக்கிறது. இதற்கு தேனி மாவட்டத்திலிருந்து கட்சி நிர்வாகிகளை அழைத்துவருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் பெரியகுளத்திலுள்ள ஓ.பி.எஸ் பண்ணை வீட்டில் மாவட்டச் செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ்-ஆல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய ஓ.பி.எஸ், “சசிகலா, டி.டி.வி-யிடம் முதல்வர் பதவியைப் பெற்ற பின்பு அவர்களையே ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. இருந்தபோதிலும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கனவு. அதையே சசிகலா தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.
தேனி மாவட்டத்தில் கட்சி நிதி திரட்டுவதற்காகப் பல கட்சிகள் தொழிலதிபர்களிடம் கையேந்தி நிற்கின்றனர். ஆனால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தேனி மாவட்டத்தை முழுமையாக நிர்வகிக்கும்போது யாரிடமும் கையேந்தி நிற்காத நிலையில் இருந்தது. எதுவேண்டுமானலும் தன்னிடம் கேட்கச் சொன்னார். அவர் இங்கிருந்து போகும்போது என்னிடம் அதைத்தான் சொல்லிச் சென்றார். எப்படி அவர் சொல்லி, மாவட்டத்தைத் தன்னிடம் விட்டுச் சென்றாரோ, அதே போன்று தற்போதுவரை எந்தத் தொழிலதிபரிடம் கட்சி நிதிக்காகக் கையேந்தவில்லை.

சென்னை செல்லும்போதெல்லாம் மாவட்டச் செயலாளர் சையது கான், டி.டி.வி.தினகரனைச் சந்திப்பார், நான் இதுவரையிலும் தடுக்கவில்லை. ஆனால், அவரிடம் ஒன்றை மட்டும் கூறுவேன். எங்கள் இருவரையும் சமாதானப்படுத்தி ஒன்றிணைத்துவிடுங்கள்” என்று பேசினார்.
ஏற்கெனவே பெரியகுளம் நகராட்சி தண்ணீர்ப் பிரச்னைக்காக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், அ.ம.மு.க-வினருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதே மாவட்டச் செயலாளர் சையதுகான், `விரைவில் அதிகாரபூர்வமாக இணைந்து செயல்படுவோம்’ எனக் கூறியிருந்தார். தற்போது ஓ.பி.எஸ் நிர்வாகிகள் முன்னிலையில் டி.டி.வி-யுடன் இணைவது தொடர்பாகப் பேசியதை ஆதரவாளர்கள் வரவேற்றனர்.