இந்தியாவும் சீனாவும் 3,488 கி.மீ. எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன. அதில், பல தசாப்தங்களாக லடாக் எல்லையும், அருணாச்சலப் பிரதேச எல்லையும் போர்ப் பதற்றத்துக்குரியப் பகுதிகளாக இருநாடுகளுக்கும் நீடித்துவருகின்றன.

குறிப்பாக, கடந்த 2020-ல் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தனர். அப்போது, இந்தியா – சீன ராணுவப் படையினருக்கு இடையே கடுமையான மோதல் வெடித்தது. இருதரப்பு வீரர்களும் ஒருவரை ஒருவர் கட்டையாலும், இரும்புக்கம்பிகள் மற்றும் கற்களாலும் மாறிமாறித் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில், இந்திய வீரர்கள் தரப்பில் 20 பேரும் சீனப் படையினர் தரப்பில் 40 பேரும் உயிரிழந்தனர்.