ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி நகராட்சிப் பகுதியில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தையில் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக 13 மாட்டிறைச்சிக் கடைகளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் இடித்தது. `மாட்டிறைச்சிக் கடைகளை இடித்ததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சந்தையில் மாட்டிறைச்சிக் கடை அமைக்க வேண்டும்’ என பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், வியாழக்கிழமை (ஏப்ரல் 13) நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் 6 மாட்டிறைச்சி கடைகளை அனுமதிப்பதாகவும், சந்தைக்கு வெளியில் உள்ள புறம்போக்கு இடத்தில் மாட்டிறைச்சிக் கடைகள் நடத்திக் கொள்ளலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நகர்மன்றத்தின் இந்த தீர்மானம் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து கூறுகையில், “புஞ்சை புளியம்பட்டி சந்தையில் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த 13 பேர் கடந்த 50 ஆண்டுகளாக மாட்டிறைச்சிக் கடை நடத்தி வந்தனர். சுகாதாரக் கேடு ஏற்படுவதாக கூறி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் முன்னறிவிப்பின்றி மாட்டிறைச்சி கடைகளை மட்டும் இடித்தது. சந்தையில் ஆடு, கோழி, மீன் இறைச்சிக் கடைகள் இயங்கும்போது, சுகாதாரக் கேடு என்று காரணத்தைக் காட்டி மாட்டிறைச்சிக் கடைகளை மட்டும் நகராட்சி நிர்வாகம் இடித்துள்ளது.