புதுடில்லி,-‘நீதித்துறை குறித்து அவதுாறு விமர்சனங்களை தெரிவித்த ஐ.பி.எல்., முன்னாள் கமிஷனர் லலித் மோடி, சமூக வலைதளங்கள் மற்றும் தேசிய நாளிதழ்கள் வாயிலாக, நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
![]() |
குற்றச்சாட்டு
ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை துவங்கி, அந்த அமைப்பின் கமிஷனராக இருந்தவர் தொழிலதிபர் லலித் மோடி, 59.
இந்த போட்டிகளை நடத்துவதில் பல்வேறு முறைகேடுகளில் அவர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு தப்பிச் சென்று குடியேறினார்.
நம் நாட்டில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், இந்திய நீதித்துறையை கடுமையாக விமர்சித்து, சில கருத்துக்களை தன் சமூக வலைதளத்தில் லலித் மோடி கடந்த மாதம் 30ல் பகிர்ந்தார்.
இவர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது லலித் மோடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மன்னிப்பு கோரப்பட்டது.
நம்பிக்கை இல்லை
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
லலித் மோடி தரப்பு தாக்கல் செய்துள்ள பதில் மனு திருப்திகரமாக இல்லை. நீதிமன்ற அறைக்குள் கடிதம் வாயிலாக தாக்கல் செய்யப்படும் மன்னிப்பில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
![]() |
நீதித்துறை குறித்து பொதுவெளியில் அவதுாறான கருத்தை அவர் தெரிவித்துள்ளார். அவர் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது மக்களுக்கு தெரியவேண்டும்.
எனவே, சமூக வலைதளங்கள் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து தேசிய நாளிதழ்களில் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும்.
எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்ற நினைப்பில் உள்ள அவர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.