புதுடில்லி : ”தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட 1,100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகளில், கிராம சபை போன்ற உள்ளாட்சியை நடத்துவதற்கான விதிகள் முதல், உறுப்பினரை தகுதி நீக்கம் செய்வது வரையிலான வழிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
புதுடில்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் முருகனின் இல்லத்தில், தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று நடந்தது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:
உலகின் மிக பழமையான மொழி தமிழ் என்பதில், ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என்பதற்கு பல்வேறு வரலாற்று குறிப்புகள் உள்ளன. இவற்றில், தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது.
தமிழகத்தின் காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் என்ற இடத்தில், 1,100 – 1,200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில், ஜனநாயக மதிப்பீடுகள் குறித்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஒரு உள்ளாட்சி அமைப்பு எப்படி செயல்பட வேண்டும், உறுப்பினர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், அவர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட வேண்டும், அந்த உறுப்பினர் எவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.
![]() |
இதற்கிடையே, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார்.
அப்போது, பிரிட்டனில் உள்ள இந்திய துாதரகம் தாக்கப்பட்டது குறித்தும், துாதரக கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும், இந்தியாவுக்கு எதிரான சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தினார்.