இந்தச் சந்திப்பு குறித்து மல்லிகார்ஜுன கார்கே, “மும்பையிலிருந்து வந்து எங்களைச் சந்தித்து எங்களுக்கு சரத் பவார் வழிகாட்டியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் என்னையும், ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேசினர். நாங்கள் எதிர்க்கட்சிகளை ஒற்றுமையாக வைத்திருப்போம். நாடு, சுதந்திரம், அரசியலமைப்பு, பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கவும், அரசு ஏஜென்சிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராகவும், ஒன்றாக நின்று போராடுவதற்குத் தயாராக இருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி இது குறித்து, “எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக கார்கேயும், சரத் பவாரும் சொன்னார்கள். இது தொடக்கம்தான். அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி எதிர்பார்த்ததைவிட விரைவாக நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். அதோடு விரைவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்றைக் கூட்ட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஆனால் மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வருவார்களா என்று தெரியவில்லை. இவர்கள் மூன்று பேரும் தங்களை எதிர்க்கட்சிக் கூட்டணிகளின் தலைவர்களாக முன்னிறுத்த முயற்சி மேற்கொண்டுவருகின்றனர். இது தவிர ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் போன்ற தலைவர்கள் எந்தப் பக்கமும் சேராமல் இருக்கின்றனர்.