இந்திய மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள் 30 பேரில் 29 பேர் கோடீஸ்வரர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள் தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த சொத்து மதிப்புகளை ஆய்வு செய்து, தேர்தல் விழிப்புணர்வு அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி இந்தியாவில் உள்ள முதலமைச்சர்கள் 30 பேரில் 29 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு 30 முதலமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் 510 கோடி சொத்து மதிப்புடன் கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி. அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பீமா காண்டு 163 கோடி சொத்துகளுடன் இரண்டாவது இடத்திலும், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் 63 கோடி சொத்துகளுடன் 3வது இடத்திலும், நாகலாந்து முதலமைச்சர் நெய்பியூ ரியோ 46 கோடி ரூபாய் சொத்துகளுடன் 4வது இடத்திலும், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 38 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

8 கோடி ரூபாய் சொத்துகளுடன் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை 13வது இடத்திலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 14வது இடத்திலும் உள்ளனர். பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், உத்தரபிரதே முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மணிப்பூர் முதலமைச்சர் `பைரன் சிங், ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் 1 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து வைத்துள்ளதாக கணக்குக் காட்டியுள்ளனர். இந்த பட்டியலில் 15 லட்சம் ரூபாய் சொத்து மதிப்புடன் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

30 முதலமைச்சர்களில் 25 பேர் பட்டதாரிகள். மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்னாத் ஷிண்டே 10-வது மட்டுமே படித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 12-வது வரை மட்டுமே படித்துள்ளனர்.

13 பேர் அதாவது 43% முதலமைச்சர்கள் தங்கள் மீது கடும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தங்களது தேர்தல் பத்திரத்தில் தெரிவித்துள்ளனர். ஜம்மு, காஷ்மீரில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருவதால் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.