வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கர்நாடகாவின், முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதிக்கு பா.ஜ.,வில் ‛சீட்’ கொடுக்காததால், அவர் காங்கிரசில் இணைய உள்ளார். இது குறித்து பா.ஜ., முதல்வர் பசவராஜ் பொம்மை, ‛அரசியலில் இது மிகவும் சாதாரணம்’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மே 10ம் தேதி 224 தொகுதிகளுக்கான சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக ஆளும் பா.ஜ., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதற்கிடையே 189 தொகுதிகளில் போட்டியிட உள்ள பா.ஜ., வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் இரு அமைச்சர்கள் உட்பட 10 எம்எல்ஏ.,க்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
‛சீட்’ கிடைக்காதவர்கள் பலரும் கட்சி தலைமை மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் பெலகாவி மாவட்டத்தின் அதானி தொகுதி, முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதிக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படாததால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

காங்கிரசில் இணைகிறார்
இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவை அவரது இல்லத்தில் சந்தித்த லட்சுமண் சவதி, காங்.,கில் இணைவது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது கர்நாடக மாநில காங்., தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவகுமார், பா.ஜ.,வில் இருந்து விலகிய லட்சுமண் சவதி காங்.,கில் இணைய உள்ளதாக தெரிவித்தார்.

சாதாரணம்
இது தொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‛லட்சுமண் சவதி குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அரசியலில் இது மிகவும் சாதரணம். அவர் காங்கிரசில் அரசியல் எதிர்காலத்தைக் கண்டுவிட்டதால் அங்கு சென்றுள்ளார். காங்கிரசுக்கு 60 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களே இல்லை. அதனால் சிலரை தங்கள் கட்சியில் சேர்த்து வருகின்றனர். ஆனால் அவர்களால் காங்கிரசுக்கு எந்த பலனும் இல்லை’ என்றார்.
Advertisement