சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு, உத்தவ் தாக்கரே அணியினர் ஏக்நாத் ஷிண்டே அணியினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஏக்நாத் ஷிண்டேயும் உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, ஏக்நாத் ஷிண்டேயை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், “சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தும் முன்பு ஏக்நாத் ஷிண்டே எங்களது இல்லத்திற்கு வந்து, `நான் பா.ஜ.க. பக்கம் செல்லவில்லை எனில் என்னை மத்திய விசாரணை ஏஜென்சி கைது செய்துவிடுவார்கள்’ எனக் கூறி அழுதார்.

இவரை (ஷிண்டே) உண்மையான சேனா என்று காட்ட அவர்கள் (பாஜக) விரும்பினார்கள். அவரது(ஷிண்டே) அதிர்ஷ்டம். பா.ஜ.க.வின் வாட்ஸ்ஆப் பல்கலைக்கழகம் கற்றுக்கொடுப்பதை விட நான் எனது தாத்தாவை பற்றி கொஞ்சம் அதிகமாகவே தெரிந்து கொண்டுள்ளேன். எனது தாத்தாவும் காங்கிரஸ் கட்சியுடன் இதற்கு முன்பு கூட்டணி வைத்திருக்கிறார். காந்தி குடும்பத்துடன் நல்ல உறவில்தான் இருந்தார். பிரணாப் முகர்ஜி, பிரதிபா பாட்டீல் ஆகியோர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட போது அவர்களுக்கு எனது தாத்தா ஆதரவு கொடுத்தார். ஆனால் தீவிரவாதத்தை ஆதரிக்கும் மக்கள் ஜனநாயக கட்சியுடன் பா.ஜ.க.கூட்டணி வைத்தது” என்று தெரிவித்தார்.
ஆதித்ய தாக்கரேயின் கருத்து உண்மைதான் என்று சஞ்சய் ராவத் எம்.பி -யும் சொல்லி இருக்கிறார். “பாண்டூப்பில் உள்ள எனது வீட்டிற்கும் ஏக்நாத் ஷிண்டே வந்து இதே கோரிக்கையை முன்வைத்தார். நான் சிறைக்கு செல்ல விரும்பவில்லை என்று என்னிடம் தெரிவித்தார். நான் அவரிடம் பயப்படவேண்டாம் என்றும், அநீதிக்கு எதிராக துணிந்து நில்லுங்கள் என்றும் அவரிடம் சொன்னேன். தற்போது ஷிண்டே அணியில் இருக்கும் பல எம்.எல்.ஏ.க்கள் மத்திய விசாரணை ஏஜென்சியின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஆவர். இது போன்று தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் நடந்தது. நடக்கிறது” என்று தெரிவித்தார்.

இது குறித்து சிவசேனா(ஷிண்டே) எம்.எல்.ஏ. சந்தோஷ் கூறுகையில், “ஆதித்ய தாக்கரேயின் கருத்து உண்மை கிடையாது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் கட்சி தலைமைக்கு எதிராக மாறினோம். பா.ஜ.க. மூலம் மத்திய விசாரணை ஏஜென்சிகளால் எங்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தார். மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே இது குறித்து கூறுகையில், “முதல்வர் ஷிண்டே மிகவும் வலிமையானவர். அவர் அழுதிருக்க மாட்டார். ஷிண்டேயிக்கு எதிரான குற்றச்சாட்டு தவறானது” என்று தெரிவித்தார்.