முன்னாள் தமிழக அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் இறுதியில் அரசியல் ரீதியாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதற்காக, தொலைபேசியில் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
01.06.2021 அன்று திண்டிவனம் ரோஷணை காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில், “சசிகலாவின் தூண்டுதலின் பேரில் அவரின் ஆதரவாளர்கள் 500 பேர் எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் என்னையும், என் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து போலீஸ் வழக்கு பதிவும் செய்திருந்தது.

இந்நிலையில், இந்த புகாரில் முகாந்திரம் ஏதும் இல்லையென்று கூறி, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யும்படி போலீஸ் அறிக்கை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து திண்டிவனம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்தார். நேற்றைய தினம், அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், சி.வி.சண்முகம் நேரில் ஆஜரானார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “எனக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டதின் காரணம் என்ன என்று கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாத இந்த ஸ்டாலின் அரசை நம்பி, எதிர்பார்த்து நான் இல்லை.
‘எனக்கு மீண்டும் பாதுகாப்பு கொடுங்கள்’ என்று இந்த அரசிடம் நான் எதிர்பார்க்கவில்லை, எனக்கு அது தேவையும் இல்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நான் வழக்கு தொடரவில்லை. ‘எனக்கு அச்சுறுத்தல் இல்லை’ என்பதனை ஸ்டாலின் அரசினுடைய டி.ஜி.பி மற்றும் உள்துறை செயலாளர் உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சொல்லுங்கள், நான் என்னுடைய வழக்கை திரும்ப பெற்றுக்கொள்கிறேன் என்பதுதான் என்னுடைய வழக்கு.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் தமிழக காவல்துறை தலைவரை பதிலளிக்கும் படி உத்தரவு போட்டார்கள். அந்த உத்தரவைப் பெற்ற உடனே நான் கொடுத்துள்ள புகார்கள் அனைத்தையும் “மிஸ்டேக் ஆஃப் ஃபேக்ட்” என்று சொல்லி வேக வேகமாக முடிக்கிறார்கள்.
இதுவரை நான் கிட்டத்தட்ட 15 புகார்கள் கொடுத்திருக்கிறேன். அதில் ஒரு புகாரில் கூட என்னை நேரடியாக விசாரித்ததில்லை. இந்த குறிப்பிட்ட வழக்கு என்பது… சசிகலா மீதும், அவரது ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொண்டு அவரது தூண்டுதலின் பேரில் ஒரே நாளில் 300 – 400 பேர் எனது எண்ணிற்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி நான் கொடுத்திருந்த புகார் ஆகும்.
ஆனால், இந்த வழக்கை விசாரிக்காமலேயே முடித்து வைத்திருக்கிறார்கள். என்னிடம் விசாரிக்கவில்லை, என் போனையும் வாங்கி பார்க்கவில்லை.
ஆனால், விசாரித்ததாகவும், என்னிடம் வாக்குமூலம் பெற்றதாகவும் போலீஸ் ஒரு பொய்யான அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. அதை மறுவிசாரணை செய்யது சசிகலா மற்றும் கொலை மிரட்டல் விடுத்த அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வழக்கு தாக்கல் செய்திருக்கிறேன்” என்றார்.