சென்னை–‘அங்கீகாரம் பெற இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்’ என, பள்ளிகளுக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தி உள்ளது.
![]() |
தமிழகத்தில், 1,400 உட்பட, நாடு முழுதும், 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகள் செயல்படுகின்றன. இன்னும் நுாற்றுக்கணக்கான பள்ளிகள், புதிதாக சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் சேர்ந்து, பள்ளிகளை நடத்த அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்துள்ளன.
இதற்காக, பல பள்ளிகள் ‘ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு செய்தது மட்டுமின்றி, இடைத்தரகர்கள் வாயிலாக, அங்கீகாரத்தை பெற முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பு:
பள்ளிகளின் அங்கீகாரம் கோரிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, அதில் சில குறைபாடுகள் அல்லது கூடுதல் ஆவண தேவைகள் இருந்தால், பள்ளிகளுக்கு தகவல் அளிக்கப்படும்.
ஆனால், பள்ளிகள் தரப்பில், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல், இடைத்தரகர்கள் வழியாகவும், தனிப்பட்ட முறையில் ஏதாவது செல்வாக்கை பயன்படுத்தியும், அவசர கதியில் அங்கீகாரம் பெற முயல்கின்றனர்.
![]() |
சி.பி.எஸ்.இ.,யின் அங்கீகார நடவடிக்கை, முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, இடைத்தரகர்களின் வலையில் விழுந்து, பள்ளிகள் அங்கீகாரம் பெற முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு கண்டறியப்படும் பள்ளிகளுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு பள்ளிகளே முழு பொறுப்பேற்க நேரிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.