வேட்பாளர் பட்டியல்கள் வெளியானதிலிருந்து பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இன்னும் 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. கர்நாடகா பா.ஜ.க-வுக்குள் நிலவிவரும் உட்கட்சிப்பூசல் வேட்பாளர் பட்டியலில் வெளிப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பா.ஜ.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களான சுகுமார் ஷெட்டி, மடால் வீரபக்ஷப்பா, நிம்பன்னவர், லிங்கன்னா, குமாரசாமி ஆகிய ஐந்து பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் தொகுதிகளில் புதிய முகங்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கிறார். ஆனால், அவரது ஹுப்பாலி தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஆக்டிவ் அரசியலில் ஈடுபடாமல் இருந்த ஜெகதீஷ் ஷெட்டர், கட்சித் தலைமையுடன் கருத்து முரண்பாடுகொண்டிருந்தார் என்று செய்திகள் வெளியாகின. ஆனாலும், இந்த முறை தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.
ஹுப்பாலியில் அவருக்கு நல்ல செல்வாக்கு உண்டு. அந்தத் தொகுதியில் அவர் ஆறு முறை வெற்றிபெற்றிருக்கிறார். ஒருவேளை, கட்சியில் வாய்ப்பு தரப்படாவிட்டால், சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கவும் அவர் முடிவுசெய்திருக்கிறார். காங்கிரஸுக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக, கருத்துக்கணிப்பு முடிவுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், தனது சொதப்பல்களைச் சரிசெய்து வெற்றிப்பாதையில் பயணிக்குமா பா.ஜ.க?