இன்று சட்டசபையில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு குறித்தும், அமித் ஷா தொடர்பாகவும் காரசார விவாதங்கள் நடந்தன. அனைத்து விவாதங்களிலும் எல்லாக் கேள்விகளுக்கும் ’ஒன் மேன்’ ஆர்மியாக பதில் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நேற்று சட்டசபையில் வன்னியர்களுக்குக் கொடுக்கப்படும் இட ஒதுக்கீடு தொடர்பாக பா.ம.க உறுப்பினர் ஜி.கே.மணி பேச அனுமதி கேட்டார். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று அது தொடர்பாகக் கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஜி.கே.மணி கொண்டுவந்தார். அப்போது பேசியவர், “அடுத்த கல்வியாண்டு தொடங்கவிருப்பதால், இட ஒதுக்கீடு கொண்டுவராமல் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் வன்னியர் சமூக மக்களால் சேர முடியாது. தமிழகத்தில் பெரும்பான்மை சமூகமாக வாழும் வன்னியர்கள் முன்னேறாமல் தமிழகம் எப்படி முன்னேறும்?” என்னும் கேள்வியை முன்வைத்தார். “எனவே, உடனடியாகக் கொண்டுவர வேண்டும்” என்னும் கோரிக்கையை முன்வைத்தார்.
