புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக இருந்தபோது, சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்தவர் ராஜா ஸ்ரீராஜ கோபால தொண்டைமான். அவரது சகோதரர் ராதகிருஷ்ணன் தொண்டைமானின், மனைவியும், சமஸ்தானத்தின் கடைசி ராணியுமான ரமாதேவி(84) கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் சிரமப்பட்டு வந்தார். இந்த நிலையில் தான், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்திருக்கிறார்.

1939ம் ஆண்டு பிறந்த ரமாதேவிக்கு, ராதகிருஷ்ண தொண்டைமானுடன் 1954ல் திருமணம் நடைபெற்றுள்ளது. தமிழக நீச்சல் சங்கத்தின் தலைவர், வாலிபால் சங்க துணைத் தலைவர், எல்.ஐ.சி இயக்குநர் குழு உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார். பல மொழிகளை கற்றுத் தேர்ந்த ராணி ரமாதேவி, வீணை மற்றும் நாட்டியத்தில் சிறந்து விளங்கியுள்ளார். புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் பள்ளியின் செயலாளராகவும் இருந்துள்ளார்.

கிரிக்கெட், டென்னிஸ், வாலிபால் போன்ற விளையாட்டுக்களை புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் மத்தியில் ஊக்குவித்து வந்தார். மறைந்த ராமாதேவிக்கு ராஜகோபால தொண்டைமான், விஜயகுமார் தொண்டைமான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், இவரின் மூத்தமகனான ராஜகோபால தொண்டைமானின் மனைவி, சாருபாலா தொண்டைமான், திருச்சி மாநகராட்சியின் மேயராக பதவி வகித்திருக்கிறார். இவர்கள் திருச்சியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனையில் வசித்து வருகின்றனர். உயிரிழந்த ரமாதேவியின் உடல் சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே இச்சடி பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இச்சடியில் இருக்கும், தெட்சிணாமூர்த்தி பண்ணையில் இவரது இறுதிச் சடங்கு, இன்று நடைபெறுகிறது. சமஸ்தானத்தின் கடைசி ராணியின் இழப்பு, மன்னர் குடும்பத்தினரிடம் மட்டுமின்றி புதுக்கோட்டை மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: