கம்பாலா: எல்லையை பாதுகாப்பதில் இந்தியாவின் அணுகுமுறை மாறிவிட்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உகாண்டா சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தலைநகர் கம்பாலாவில் இந்திய சமூகத்தினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது, ”எழுந்து நிற்கத் தயாராக இருக்கும் வித்தியாசமான இந்தியாவை தற்போது மக்கள் பார்க்கிறார்கள். கடந்த 2016ல் ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கான பதிலடியாக இருந்தாலும் சரி, 2019-ல் நிகழ்ந்த புல்வாமா தாக்குதலுக்கான பதிலடியாக இருந்தாலும் சரி, தேசிய பாதுகாப்பு சவால்களை திறம்பட எதிர்கொள்ளக்கூடிய புதிய இந்தியாவை மக்கள் பார்க்கிறார்கள். எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களை பல பத்தாண்டுகளாக சகித்து வந்த இந்தியா தற்போது இல்லை. இது பதிலடி கொடுக்கக்கூடிய வித்தியாசமான இந்தியா.

இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறி கடந்த 3 ஆண்டுளாக சீனா எல்லையில் படைகளைக் குவித்துள்ளது. இந்தியாவும் பதிலுக்கு கடினமான வானிலை நிலவும் மலை உச்சியிலும் தனது படைகளை நிறுத்தியுள்ளது. இதற்கு முன் இந்தியா இப்படி இருந்தது இல்லை. அதுமட்டுமல்ல, சீன எல்லையை ஒட்டி நாம் பல்வேறு உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி இருக்கிறோம். இதுபோன்ற கட்டமைப்புகள் முன்பே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அப்போது நடக்கவில்லை. தற்போது நடக்கிறது.

சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை இந்தியா கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெயை எந்த நாட்டிடம் வாங்க வேண்டும், எந்த நாட்டிடம் வாங்கக் கூடாது என யாரும் தற்போது நமக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. நாட்டு மக்களின் நலன் கருதி இந்தியா சுதந்திரமாக முடிவுகளை எடுக்கிறது” என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: