மார்ச் மாத இறுதியில் நடத்துவதாக இருந்த முப்பெரும் விழாவை ஏப்ரல் 24-ம் தேதி நடத்துவது என அறிவித்திருக்கிறது பன்னீர் தரப்பு. திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு, முறைப்படி எல்லா அனுமதியும் கிடைத்துவிட்டதாம். பர்ஸைத் திறக்கவேண்டிய திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான கு.ப.கிருஷ்ணனும், வெல்லமண்டி நடராஜனும் சைலன்ட் மோடில் இருந்தாலும், தன் முயற்சியில் மனம் தளறாத விக்ரமாதித்தனாக இறங்கி வேலை செய்கிறாராம் ஓ.பி.எஸ். அவரே சசிகலாவைத் தொடர்புகொண்டு, ‘அம்மா எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படணும்மா… நீங்க கண்டிப்பா விழாவுக்கு வரணும்’ என்று அழைப்பு விடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

பன்னீர்செல்வம்

வைத்திலிங்கமும் நேரில் சென்று சசிகலாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறாராம். பலத்தைக் காட்டுவதற்கான கடைசி வாய்ப்பு என்பதால், ஓ.பி.எஸ்-ஸும் கனத்த இதயத்தோடு தன்னுடைய பர்ஸைத் திறந்திருப்பதாகச் சொல்கிறார்கள்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பன்னீர் பக்கமிருந்து, ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பக்கத்துக்குத் தாவிய அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி, தற்போது பா.ஜ.க-வுக்குச் செல்லும் முடிவில் இருக்கிறாராம். எடப்பாடி அணியில், தான் எதிர்பார்த்த எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படாததால் அப்செட்டில் இருந்தவர், தாய்க்கட்சியான பா.ஜ.க-வில் இணைவதற்குத் தூது மேல் தூது விட்டிருக்கிறார். ‘பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகளைத் தூக்கியதற்கு பதிலாக, அங்கிருந்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வது’ என்று கொள்கை முடிவெடுத்திருக்கும் மாஜி காக்கித் தரப்பு, இவரை உடனே கட்சியில் சேர்க்க ஓகே சொல்லிவிட்டதாம். ஆனால், ‘நான் டெல்லியில் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில்தான் கட்சியில் இணைவேன்’ என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறாராம் அந்த சீனியர் நிர்வாகி. ‘பெருங்கூட்டத்தோடு கட்சிக்கு வந்தால்கூட இந்த பந்தாவை ஏத்துக்கலாம்… ஒரு டூ வீலரில் கூட்டிவரக்கூட ஆதரவாளர்கள் இல்லாதவர் பண்ணுற சேட்டையைப் பார்த்தியா?’ என்று சிரிக்கிறார்கள் கமலாலயத்தில்.

தன் வாரிசையும் எப்படியாவது, அரசியல் ‘கடலில்’ இறக்கிவிட வேண்டும் என்று நினைத்தார் அந்தத் தென்மாவட்ட அமைச்சர். இதற்காக, கருணாநிதி தொடங்கி, ஸ்டாலின், உதயநிதி என அனைவரது பிறந்தநாள்களுக்கும் விளையாட்டுப் போட்டிகளைத் தன் வாரிசின் பெயரிலேயே நடத்தினார். அதோடு, அந்த விளையாட்டுப் போட்டிகளுக்கான விளம்பரங்களில், ‘இளைய தெற்கு மாவட்டமே…’, ‘இளைய அண்ணாச்சியே…’ போன்ற வாசகங்களை இடம்பெறச் செய்து அழகு பார்த்தார். ஆனால் வாரிசோ, அரசியலைவிட கனிம வள பிசினஸில்தான் ஆர்வம் என்று தந்தையிடம் உறுதியாகச் சொல்லிவிட்டாராம். தனக்கு அடுத்து தன் வாரிசு வருவார்… மாவட்டத்தைக் கட்டி ஆள்வார் என நினைத்த அமைச்சர், வாரிசின் ஆர்வக் குறைவால் சோகக்கடலில் ஆழ்ந்துவிட்டாராம். ‘பேசாமல் இளைய வாரிசைக் களமிறக்குங்க அண்ணாச்சி’ என்று உடனிருப்பவர்கள் தூபம் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

“அடுத்து நம்ம பேராசான்தான் மாநிலத் தலைவர்… ஒரு எட்டு வந்து மரியாதை செஞ்சு தொடர்பை ஏற்படுத்திக்குங்க” என்று தூங்கா நகர காவிகள் பரப்பும் தகவலால், தூக்கம் தொலைத்திருக்கிறாராம் மாஜி காக்கி. பிரதமர் நிகழ்ச்சியில் மாஜி காக்கி கலந்துகொள்ளாதது, கூட்டணிக் கட்சிகளிடம் உரசல் உள்ளிட்ட விவகாரங்களால் தலைமை மாற்றப்படும் எனச் சொல்லப்படுவதால், ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ என்ற முணுமுணுப்பும் நிர்வாகிகளிடம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. ‘சமீபகாலமாக மாநிலத் தலைமைக்கு எதிரான பல உள்குத்து வேலைகளைச் செய்தது அந்தப் பேராசான்தான்’ என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள்.

இதனால், மாநிலத் தலைமைக்கு நெருக்கமான வார் ரூம் கடுப்பாகியிருக்கிறதாம். “மாஜி காக்கி ஓ.கே சொன்னால், பேராசானை அட்டாக் செய்யவும் வார் ரூம் தயாராக இருக்கிறது” என்கிறார்கள் அடையாறு ஏரியாவில்.

போக்குவரத்துத்துறையில் கோலோச்சிவந்த ‘முனிவர்’ பிரமுகரை ஓரங்கட்டிவிட்டதாம் ஆட்சி மேலிடம். ஆட்சி மேலிடத்துக்கு நெருக்கமான சில குடும்பப் பிரமுகர்கள் பெயரைப் பயன்படுத்தி, அண்மையில் இரண்டு ஒப்பந்தங்களில், முனிவர் ‘டீல்’ பேசியதே இதற்குக் காரணமாம். உளவுத்துறை மூலமாக இந்த விவகாரம் மேலிடத்தை எட்டியதைத் தொடர்ந்து, முனிவர் பிரமுகரை அழைத்து எச்சரித்திருக்கிறார்கள். அவர் தரப்பிலிருந்து துறைக்குள் எந்த சிபாரிசு வந்தாலும் செய்யக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவும் போடப்பட்டிருக்கிறதாம்.

புதுச்சேரியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி, சரியான தலைமை இல்லாததால் துவண்டுகிடக்கிறது. தனது ராஜதந்திரத்தால் கட்சியை பலப்படுத்திவிடுவதாகக் கூறி, மாநிலத் தலைவர் பதவியைப் பெறுவதற்காக காய்நகர்த்தினார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி. ஆனால், “உங்கள் ராஜதந்திரத்தால்தான் புதுச்சேரியில் தற்போது பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது” என்று கடுகடுத்ததாம் டெல்லி தலைமை.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி

அதனால் வேறு வழியின்றி மீண்டும் டெல்லி அரசியலுக்குத் திரும்ப முடிவெடுத்திருக்கிறாராம் நாராயணசாமி. ‘திண்ணை எப்போது காலியாகும்?’ என்று காத்திருந்த தற்போதைய எம்.பி வைத்திலிங்கம், 2026 முதல்வர் வேட்பாளராகும் முஸ்தீபுகளில் இறங்கிவிட்டாராம்!

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *