கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 10 ஆம் தேதி 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக மாநில வருவாய்துறை அமைச்சர் அசோக், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமார் போட்டியிடும் ராம் நகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ள நிலையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர் அசோக், “ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு எனது முதற் கடவுளான அண்ணாமலையாரை தரிசித்து சென்ற பிறகுதான் வேட்பு மனு தாக்கல் செய்வேன். அதன் அடிப்படையில் நானும் சக எம்எல்ஏக்களும்  அண்ணாமலையாரிடம் தேர்தலில் வெற்றிபெற ஆசீர்வாதம் பெறுவதற்காக சாமி தரிசனம் செய்தேன். மத்தியிலும் மாநிலத்திலும் டபுள் எஞ்சின் அரசாக பாஜக அரசு கர்நாடகத்தில் உள்ளது. மீண்டும் கர்நாடகத்தில் பாஜக அரசு வெற்றி பெற நானும் எனது கட்சியினரும் அண்ணாமலையாரிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக இங்கு வந்துள்ளோம்.

கனகபுரா தொகுதியில் தான் போட்டியிடுவது தலைமை எடுத்த முடிவு. தலைமை எடுத்த முடிவு என்பது இறுதி முடிவு நான் அதில் சிப்பாய், சிப்பாய் என்றால் கட்சித் தலைமை எடுத்த முடிவை நான் மதித்து போட்டியிடுகிறேன். அதே வேளையில் தற்பொழுது வருவாய் துறை அமைச்சராக தான் உள்ளதால் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ள டி கே சிவக்குமார் எதிர்த்து போட்டியிடுவதற்காக தன்னை கட்சி தலைமை நிறுத்தியுள்ளது, 100% இத்தேர்தலில் தான் வெற்றி பெறுவேன். தொடர்ச்சியாக நான் தேர்தலில் 6 முறை வெற்றி பெற்றுள்ளேன். இதுதான் முதல் முறை இரண்டு தொகுதிகளில் நிற்பது என்பது. கட்சி தலைமை வழிகாட்டுதலின்படியே தான் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் பாஜக 100 சதவீதம் தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெறும். கர்நாடக மாநில சாலை வளர்ச்சிக்கும், வேளாண் வளர்ச்சிக்கும், மருத்துவ துறைக்கும் மோடி அரசாங்கம் பல திட்டங்களையும், பல்வேறு வகையில் நிதியுதவிகளையும் செய்து உள்ளது” என்று கூறினார்.

 

காங்கிரஸ் மாநிலத் தலைவர் டிகே சிவகுமார் கர்நாடக மாநிலத்தில் போலி வாக்காளர்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளதாக குற்றம் சாட்டியதற்கு பதில் கூறிய அவர், ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது இயற்கை என்றும், இது ஒன்றும் புதிதல்ல, தேர்தல் ஆணையம் பாஜகவோ அல்லது காங்கிரஸோ அல்லது மற்ற கட்சிகளோ கிடையாது அவர்கள் சுதந்திரமானவர்கள் என்றும் முறையான முடிவுகளை மேற்கொள்வார்கள் என்றும், வருமான வரி, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் சுதந்திரமான அமைப்பு என்றும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் ஆட்சியில் இருக்கும் பொழுதும் கர்நாடக மாநிலத்தில் பல சோதனைகள் நடைபெற்றதை சுட்டி காட்டியவர் இது போன்று சோதனைகள் இயற்கையான செயல் என்றும் தெரிவித்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *