குஜிலியம்பாறை -திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சியில் பணிபுரியும் ஆபரேட்டர்கள்,துப்புரவு பணியாளர்களுக்கு பெரும்பாலான ஊராட்சிகளில் 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் ஊழியர்களுக்கான சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் முறையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஊராட்சிகளில் உள்ள குடிநீர்,தெரு விளக்கு பராமரிப்புக்கென மாநில நிதிக்குழு மானிய நிதியிலிருந்து ஒவ்வொரு மாதம் அரசு பராமரிப்பு நிதி வழங்குகிறது. இந்த நிதியிலிருந்து ஊராட்சி பணியாளர்கள், ஆப்பரேட்டர்கள்,துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஊராட்சிகளுக்கான முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிதி, முறையாக வராமல் 2 மற்றும் 3 மாதங்களுக்கு ஒரு முறை வருவதால், குடிநீர் பணிகளை முறையாக பார்க்க முடியாமல் ஊராட்சிகள் திணறுகின்றன. அதுமட்டுமின்றி தற்போது ஊராட்சிகளில் பணி புரியும் ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள், துாய்மை பணியாளர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. பணியாளர்களுக்கான சம்பளம் கிடைக்காததால் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இப்பிரச்னை மீது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
……………
முறையாக கவனியுங்க
ஒரு மனிதன் உழைத்து விட்டு ஓய்வு எடுப்பதற்கு முன்பே அவரது கூலியை கொடுக்க வேண்டும் என காரல் மார்க்ஸ் கூறுகிறார். அப்படி இருக்கும்போது ஊழியர்களுக்கான சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் முறையாக வழங்க வேண்டும். குறிப்பாக ஊராட்சிகளில் நிதி நிலை கையிருப்பு இல்லை. எனவே ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். கேரளாவை போல் ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, தெரு விளக்கு, குடிநீர், துப்புரவு பணிகளை முறையாக கவனிக்க வேண்டும் என்றால் ஊழியர் சம்பளத்தை முறையாக வழங்க வேண்டும்.
ஏ ராஜாத்தினம், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர், குஜிலியம்பாறை.
………………………………….
Advertisement
