Loading

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், ஹாட்ரிக் டக் அவுட்டான நிலையிலும், கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில், சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக 2018இல் பதிவிட்டிருந்த ரோகித் சர்மாவின் ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நிறைவடைந்த ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி தொடரில் இடம்பெற்றிருந்த சூர்யகுமார் யாதவ், தொடர்ந்து 3வது ஒருநாள் போட்டியிலும் டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தார். தொடரின் முதல் இரண்டு போட்டிகளில், முதல் பந்திலேயே அவர் அவுட் ஆன போதும் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு 3வது போட்டியிலும் வாய்ப்பை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மார்ச் 22ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற அந்த கடைசிப் போட்டியிலும் ஆஷ்டன் அகர் பந்துவீச்சில் முதல் பந்திலேயே போல்டாகியதுடன் டக் அவுட் முறையில் அவர் வெளியேறி இருந்தார். இதன்மூலம் தொடர் ஒன்றில் ஓர் அணிக்கு எதிராக தொடர்ந்து 3 முறை டக் அவுட் ஆன பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

image

ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் டக் அவுட்டானபோதும் ரோகித்திடம் சூர்யகுமார் யாதவ் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போதும் அவர், “முந்தைய போட்டிகளில் தனது திறமையை சூர்யகுமார் யாதவ் காட்டியுள்ளார். ஆகையால் அவரது திறமைக்கு ஏற்றவாறு இன்னும் கூடுதல் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். அவருக்கும் நன்றாக தெரியும், மீண்டும் நல்ல மனநிலைக்கு வந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என உணர்ந்திருப்பார்.

அவருக்கு முந்தைய தொடர்களில் உரிய வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆகையால் கிடைக்கும் வாய்ப்புகளில் ஒரு சில தவறுகள் இருந்தாலும் இன்னும் கூடுதல் வாய்ப்பை கொடுக்க வேண்டும். சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று திறமையான வீரர்கள் யாரும் ஒருபோதும் நினைத்து விடக்கூடாது. அவர் இப்போது நல்ல பார்மில் தான் இருக்கிறார். ஆனால் இப்போது மாற்றுவீராக மட்டுமே விளையாடி வருகிறார்” என்று சொன்னதுடன், 3வது போட்டியிலும் வாய்ப்பு வழங்கியிருந்தார்.

image

3-வது போட்டியிலும் அவர் தோற்றதால் மீண்டும் அவரிடம் சூர்யகுமார் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடரில் மூன்று பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவருக்கு மூன்று நல்ல பந்துகள் கிடைத்தன, அதைத் தவறவிட்டார். ஆனால், இதில் பெரிதாக கவனம் செலுத்த வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. எப்படி இதைக் கையாள வேண்டும், எப்படி முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.

அவர் நன்றாக ஸ்பின் விளையாடுவதை கடந்த இரண்டு வருடங்களாகப் பார்த்து வருகிறோம். அதனால்தான் கடைசி 15-20 ஓவர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கினோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரால் மூன்று பந்துகளை மட்டுமே விளையாட முடிந்தது. இது யாருக்கும் நடக்கலாம். இதனால் அவரது திறமை குறைந்து போகப்போவதில்லை. அவர் இதை கடந்து வருவார்” என்றார்.

image

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இதேபோன்றதொரு முந்தைய நெருக்கடியான சூழலில் அவருக்கு ஆதரவாக ரோகித் சர்மா பதிவிட்ட ட்விட்டர் பதிவும் வைரலாகி வருகிறது. 2018இல் இதேபோன்று சூர்யகுமார் திணறிய சமயத்தில், “சூரியன் மீண்டும் நாளை உதிக்கும்” என்று ரோகித் சர்மா அவருக்கு ஆதரவாகப் பதிவிட்டிருந்த ட்வீட் தற்போது வைரலாகிவருகிறது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *