பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதனடிப்படியில், மேற்கு வங்கத்தில் நியமித்த 29 துணைவேந்தர் நியமனத்தை ரத்துசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறது. 2014-ம் ஆண்டு, மேற்கு வங்க அரசு துணைவேந்தர் சட்டத்தில் மாநில அரசே நியமிக்கும் அதிகாரத்தை வழங்கும் திருத்தத்தை மேற்கொண்டது. அதன்படி தற்போது வரை 29 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை மேற்கு வங்க அரசு நியமித்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில், “யு.ஜி.சி மானியக்குழு ஒழுங்கு விதி 2018-ன்படி துணைவேந்தர் நியமனக்குழுவில் யு.ஜி.சி பிரதிநிதியும் இடம்பெற்றிருப்பது அவசியம். ஆனால், மேற்கு வங்கம் கொண்டுவந்த சட்டத் திருத்தத்தில் ஒழுங்குமுறை விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை” என்னும் வாதம் முன்வைக்கப்பட்டது.

இரு தரப்பு கருத்துகளையும் கேட்ட நீதிபதிகள், “பல்கலைக்கழக விதிகளைப் பின்பற்றுவது அவசியம். அதைத் தவிர்த்துவிட்டு நியமனம் செய்ததை ரத்துசெய்கிறோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், பல்கலைக்கழக விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை உறுதியாக வெளிப்படுத்தியிருக்கின்றன. எனவே, அதைக் கடைப்பிடிக்க வேண்டும். பல்கலைக்கழக ஒழுங்கு விதிகளைத் தவிர்த்துவிட்டு, துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமை மாநில அரசுக்குக் கிடையாது” எனத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், தன் ஆட்சி இல்லாத கட்சிகள் ஆளும் அரசைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆளுநர் வாயிலாகப் பல வேலைகளைச் செய்துவந்தது. இதனால், ஆளுநருக்கும் ஆளும் அரசுக்கும் மோதல் போக்கு உண்டானது. குறிப்பாக, வேந்தராகச் செயல்படும் ஆளுநர்கள், துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசின் முடிவுகளை ஏற்காமல் தன்னிச்சையாகச் செயல்பட தொடங்கியது, ஆளுநர்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கை உண்டாக்கியது.