Loading

ஜனநாயக தாக்குதல்களுக்கு மத்தியிலும் இந்தியா தன் இலக்குகளை எட்டிவிடும் என இந்தியா டுடே விழாவில் கலந்து கொண்ட பேசிய பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

latest tamil news

இந்தியா டுடே விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் முக்கிய பகுதிகள்:

‘இந்தியாவின் தருணம்’ என்ற தலைப்பு என்னை கவர்கிறது. உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இது உண்மையிலேயே இந்தியாவின் தருணம் என்ற எனது குரலை எதிரொலிப்பதை பார்க்கிறீர்கள்.

சரியாக 20 மாதங்களுக்கு முன்பு செங்கோட்டையில் நான் உரையாற்றிய வேளையில் “இதுவே இந்தியாவின் நேரம், இதுவே சரியான நேரம்” என்று குறிப்பிட்டேன். சொன்னதோடு நாங்கள் நின்றுவிடவில்லை.

எந்த ஒரு தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திலும் நிச்சயமாக பல்வேறு சவால்கள் மற்றும் நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த அடிப்படையில் பார்க்கும்போது, 21 ம் நூற்றாண்டின் இந்த பத்தாண்டு காலகட்டம் இந்தியாவிற்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அன்றைக்கே சுட்டிக் காட்டினேன்.

நம்மை விட பல நாடுகள் நமக்கு முன்பாக, சொல்லப் போனால் பல தசாப்தங்களுக்கு முன்னரே பல்வேறு துறைகளில் அபாரமான முன்னேற்றத்தை கண்டுள்ளன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால், இப்போது இந்தியா சந்திக்கும் சூழ்நிலைக்கும் அந்த நாடுகள் அப்போது எதிர்கொண்ட சூழ்நிலைக்கும் நிரம்ப வேறுபாடுகள் இருக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.

இன்று இருப்பதை போல அப்போது உலகம் சுருங்கி இருக்கவில்லை. அதனால் உலக அளவில் கடுமையான போட்டி எதுவும் இல்லாமல் இருந்தது. உலகளாவிய போட்டி இல்லாத உலகில் அவர்கள் தங்களுக்குள் போட்டியிட்டதே அவர்களின் வெற்றிக்கான காரணம். இன்றைய சூழல் நிச்சயமாக அப்படி இல்லை.

உலகளாவிய சவால்கள் உண்மையில் மிகவும் விரிவானவை. இதுதான் என்று நிர்ணயித்து சொல்ல முடியாத பல வடிவங்களில் இன்றைய சவால்கள் நம் முன்னால் விசுவரூபம் எடுத்து நிற்கின்றன. ஆகவே, அன்றைக்கு இருந்த சூழலுடன் ஒப்பிட்டு பார்த்தால் இன்ரு நாம் சந்திக்கின்ற பிரச்னைகளும் போட்டியும் சூழ்நிலைகளும் முற்றிலும் வேறுபட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது.

latest tamil news

அப்படி ஒரு வித்தியாசமான சூழலில் தான் இன்று உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் விஷயமாக ‘இந்திய தருணம்’ உருவெடுத்து இருக்கிறது. இது சாதாரணமான விஷயம் அல்ல. குறிப்பாக நூறு ஆண்டுகளில் கண்டிராத மிகப்பெரிய தொற்றுநோய் உலகை தாக்கி உலக வழக்கங்களை அடியோடு புரட்டிப் போட்டு நடைமுறைகளை மாற்றி எழுதிய காலகட்டம் இது. அதையும் மீறி இரண்டு நாடுகலுக்கு இடையே ஒரு போர் ஓராண்டு காலமாக நீடித்து நடந்து வருவதையும் பார்க்கிறோம். அப்படியான மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இந்த பூமியில் இந்தியாவின் பெயரில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டு வருகிறது, அதை நாம் அனைவரும் ஒன்றாக காண்கிறோம்.

ஸ்மார்ட்போன் டேட்டா நுகர்வில் உலகில் முதலிடத்தில் உள்ள நாடு இந்தியா. பொருளாதார நிதி தொழில்நுட்பத்தை மிகப்பெரிய அளவில் சுவீகரித்து கையாளும் நாடு இந்தியா. உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தி நாடு இந்தியா. புதிய தொழில் தொடங்கும் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சூழல் அமைந்திருக்கும் உலகின் மூன்றாவது தேசம் இந்தியா. இப்படியாக நமது சாதனைகளை ஒன்றின் மீது ஒன்றாக பெரும் உயரத்துக்கு அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்தியாவின் வரலாற்று பெருமை வாய்ந்த பசுமை பட்ஜெட் இந்த 75 நாட்களுக்குள் வழங்கப்பட்டது. கர்நாடகாவின் ஷிவமோகாவில் புதிய விமான நிலையம் திறக்கப்பட்டது. மும்பை மெட்ரோவின் அடுத்த கட்டம் தொடங்கப்பட்டது. உலகின் மிக நீளமான மெட்ரோ ரிவர் க்ரூஸ் அதன் பயணத்தை முடித்தது. பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலை திறக்கப்பட்டது. டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் ஒரு பகுதி திறக்கப்பட்டது. மும்பையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு வந்தே பாரத் ரயில்கள் புறப்பட்டன.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதை நடைமுறைக்கு கொண்டுவந்து பிறகு இந்தியா E-20 எரிபொருளை அறிமுகப்படுத்தியது. தும்கூருவில் ஆசியாவின் அதிநவீன ஹெலிகாப்டர் உற்பத்தி நிலையத்தை தொடங்கி வைத்தது. வரலாற்றில் இதுவரை கண்டிராத எண்ணிக்கையில் ஏர் இந்தியா விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்ததது. இ-சஞ்சீவனி செயலி மூலம் 10 கோடி தொலை தொடர்புகள் என்ற மைல்கல்லை எட்டியது. 8 கோடி புதிய குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ரயில் கட்டமைப்பில் 100 சதவீதம் மின்மயம் பூர்த்தி ஆகியுள்ளது. சிங்கப்பூருடன் UPI இணைப்பு உருவாக்கப்பட்டது. துருக்கிக்கு உதவ இந்தியா ‘ஆபரேஷன் தோஸ்த்’ தொடங்கியது. இந்திய-வங்காளதேச எரிவாயு குழாய் இன்று மாலையில் திறக்கப்பட்டது. வெறும் 75 நாட்களில் நடந்தேறிய இந்த சாதனைகள் அனைத்தும் நான் முன்னமே குறிப்பிட்ட இந்திய தருணத்தின் பிரதிபலிப்பு என்றால் அது மிகையாகாது. அதனால்தான் இது இந்தியாவின் தருணம் அன்று மோடி சொன்னதை இன்று உலகமே சொல்கிறது.

நாடு முழுவதும் மக்களிடம் தன்னம்பிக்கையும் உறுதியும் நிறைந்திருக்கும் இன்றைய சூழ்நிலையில், உலக அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்துவது, இந்தியாவின் மன உறுதியை உடைப்பது போன்ற சிலரது அவநம்பிக்கையான பேச்சையும் பார்க்கிறோம். என்றாலும் இன்றைய இந்தியா மீது உலக நாடுகள் கொண்டிருக்கும் மதிப்பையும் நம்பிக்கையையும் அநத்தகைய பேச்சுகள் சிதைத்து விட முடியாது.

இதுவரை இல்லாத வேகத்தில் 11 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டன. 48 கோடி பேர் வங்கி அமைப்பில் சேர்க்கப்பட்டனர். பக்கா வீடுகள் கட்டுவதற்கான பணம் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகளில் 3 கோடிக்கு அதிகமான வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. வீடுகளில் பெண்களுக்கும் உரிமை உண்டு என்பதை சட்டபூர்வம் ஆக்கினோம். ஏன் என்றால், ஏழை பெண்கள் அதிகாரம் பெற்றவர்களாக உணரும் போது இந்தியாவின் தருணம் முழுமை பெறும்.

இதுவரை இரண்டு லட்சத்து 34 ஆயிரம் கிராமங்களில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்து ஒரு கோடியே 22 லட்சம் சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள இந்தியாவின் 11 கோடி சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமர் கிசான் சம்மன் நிதியில் இருந்து இரண்டரை லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய இந்தியாவில் இது போல மவுன புரட்சிகள் பல நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் தருணம் என்பதன் அடிநாதம் இந்த அடிப்படை மாற்றம் தான்.

காலாவதியான சிந்தனை, அணுகுமுறை மற்றும் சில குடும்பங்களின் ஆதிக்க ஆசைகள் காரணமாக இந்தியாவில் நீண்டகால தேக்கநிலை இருந்து வந்தது. நாடு முன்னேற வேண்டுமானால், ஆட்சி செய்வோரிடம் சுறுசுறுப்பு மற்றும் தைரியமான முடிவெடுக்கும் சக்தி இருக்க வேண்டும்.

இந்த மனித நேயம் அரசிடம் இல்லாமல் இருந்திருந்தால், கொரோனாவுக்கு எதிராக இவ்வளவு பெரிய போரில் உலகமே பிரமிக்கும் வகையில் நமது தேசம் வெற்றி பெற்றிருக்க முடியாது. இந்தியா இன்று எதைச் சாதித்தாலும், அதற்கு நமது ஜனநாயகத்தின் சக்தி, நமது அமைப்புகளின் சக்தி தான் காரணம். உலக நெருக்கடிக்கு மத்தியில் இன்று இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. வங்கி அமைப்பு வலுவாக உள்ளது. இதுவே நமது நிறுவன கட்டமைப்பின் பலம். இதனாலேயே நமது ஜனநாயகம் மற்றும் நமது ஜனநாயக அமைப்புகள் அதிகம் தாக்கப்படுகின்றன என்று நினைக்கிறேன். ஆனால், இந்த தாக்குதல்களுக்கு மத்தியிலும் இந்தியா தனது இலக்குகளை நோக்கி வேகமாக நகரும், மேலும் அதன் இலக்குகளை அடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு மோடி பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *