அ.ம.மு.க தொடங்கப்பட்டதிலிருந்தே டி.டி.வி.தினகரனுடன் பக்கபலமாய் இருந்து பயணிப்பவர் சி.ஆர்.சரஸ்வதி. பல நிர்வாகிகள் அ.ம.மு.க-வைவிட்டு வெளியேறியபோதும்கூட விலகாமல், இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்பினரை மிகக்கடுமையாக விமர்சித்து வந்தார். அதனால்தான் அ.ம.மு.க செய்தித் தொடர்பாளராக இருந்த சி.ஆர்.சரஸ்வதியை கொள்கைப் பரப்பு செயலாளராக நியமித்தார் டி.டி.வி.தினகரன். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிகலாவை அ.ம.மு.க-வினர் சந்திக்கக் கூடாது என டி.டி.வி.தினகரன் மறைமுக உத்தரவு போட்டதாகத் தகவல் பரவியது. அப்போதே, சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் சி.ஆர்.சரஸ்வதிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மார்ச் 15-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் நடந்த அ.ம.மு.க ஆறாம் ஆண்டு தொடக்கவிழாவுக்கு வந்த சரஸ்வதி சொந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள், துணைப் பொதுச்செயலாளர்களால் ஓரங்கட்டப்பட்டதாகவும், அதனால் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக, கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் சி.ஆர்.சரஸ்வதி பெரும்பாலும் அனைத்து பிரஸ் மீட்டிலும் டி.டி.வி.தினகரன் அருகிலேயே அமர்ந்திருப்பார்.
அதேபோல, அ.ம.மு.க ஆறாம் ஆண்டு தொடக்கவிழா பிரஸ்மீட்டிலும் முன்வரிசையில் டி.டி.வி.தினகரன் அமரும் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தார். ஆனால், தினகரன் வருவதற்கு முன்பாகவே சரஸ்வதியை சூழ்ந்துகொண்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் அவரை வலுக்கட்டாயமாக பின்வரிசையில் அமரவைத்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், பிரஸ்மீட் முடிந்து, டி.டி.வி.தினகரனுடன் தனி அறைக்குள் கட்சியின் பிறநிர்வாகிகள் சென்றநிலையில், வெகுநேரமாக தினகரனுக்குக் கொடுப்பதற்காக பூங்கொத்துடன் வெளியிலேயே காத்துக்கிடந்திருக்கிறார். மேலும், பெரும்பாலான நிர்வாகிகள் அவரைக் கண்டுகொள்ளாமல் தனித்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தொடர்ச்சியாகப் பல்வேறு அ.ம.மு.க நிர்வாகிகள் கட்சியைவிட்டு விலகி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க-வில் இணைந்துவரும் சூழலில், சொந்தக் கட்சியினராலேயே ஓரங்கட்டப்பட்டும், நெருக்கமான சசிலாவையும் சந்திக்கமுடியாமல், கடுமையான விமர்சனத்தால் அ.தி.மு.க இ.பி.எஸ் பக்கமும் செல்லமுடியாமல் சி.ஆர்.சரஸ்வதி பரிதவித்துவருவதாகப் பேச்சுகள் அடிபட்டுவருகின்றன.
இது குறித்து சி.ஆர்.சரஸ்வதியிடம் பேசினோம். “யாரும் என்னைப் புறக்கணிக்கவில்லை! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., அம்மா காலத்திலிருந்தே கட்சியில் இருக்கும் சீனியர் நிர்வாகிகள், மாநில பொறுப்பாளர்கள் வரவும் நானாகத்தான் மரியாதை நிமித்தமாக எழுந்து பின்வரிசைக்குச் சென்றேன். என்னை யாரும் பின்வரிசையில் அமரச்சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. பல பிரஸ்மீட்டில் பின்வரிசையிலும் அமர்ந்திருக்கிறேன்.

மேலும், கடுமையான வெயில் புழுக்கத்தினாலும், பசி கலைப்பினாலும் எனது முகம் வாடியிருப்பதுபோலத் தோன்றியிருக்கலாம். நான் ஆரம்பம் தொட்டே முழு திருப்தியுடன் அ.ம.மு.க-வில் இணைந்து செயலாற்றிவருகிறேன். உண்மையான அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு அ.ம.மு.க-வில் இயங்கிவருகிறேன். நான் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் செய்திகள் வதந்தி!” என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சி.ஆர்.சரஸ்வதி.