Loading

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களிடம் நகைகளைத் திருடிய திருநெல்வேலியைச் சேர்ந்த 2 பெண்களை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கீழ தட்டாப்பாறை பகுதியைச் சேர்ந்த ஆத்திமுத்து மனைவி மல்லிகா (60) என்பவர் கடந்த 1.1.2023 அன்று திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, திருச்செந்தூர் கோயில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது அவரது 3 பவுன் தங்க நகை திருட்டு போயுள்ளது.

இதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் வானமாமலை (35) என்பவரிடம் கடந்த 26.1.2023 அன்று 10 கிராம் தங்கச் சங்கிலியும், சாத்தான்குளம் இடைச்சிவிளையைச் சேர்ந்த காசி மகன் முத்துக்குமார் (25) என்பவரிடம் கடந்த 26.1.2023 அன்று 10 கிராம் தங்க சங்கிலியும் திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் வைத்து திருட்டு போயின.

இம்மூவரும் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். டிஎஸ்பி ஆவுடையப்பன் மேற்பார்வையில், ஆய்வாளர் கனகாபாய் தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். தனிப்படை போலீஸார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், திருநெல்வேலி பாலபாக்கியா நகரைச் சேர்ந்த பரமசிவம் மனைவி ராமலட்சுமி (எ) பேச்சியம்மாள் (60) மற்றும் திருநெல்வேலி குமரேசன் காலனி சேர்ந்த சண்முகம் மனைவி கல்யாணி (49) ஆகிய இருவரும் நகைகளைத் திருடியது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து ரூ. 1.70 லட்சம் மதிப்பிலான 5.5 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள ராமலெட்சுமி மீது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு, ஆழ்வார்குறிச்சியில் 5, தென்காசியில் 8 மற்றும் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் என 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதுபோல், கல்யாணி மீது கன்னியாகுமரி மற்றும் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் தலா ஒன்று, குற்றாலத்தில் 6, களக்காட்டில் 2 மற்றும் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் என 13 வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *