Loading

கோவை: தைப்பூசம் என்றாலே அனைவரின் நினைவுக்கு முதலில் வருவது காவடியாட்டம்.

காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஆட்டம். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடியை தோளில் வைத்துக்கொண்டு ஆடுவர். தமிழ்நாடு மட்டுமின்றி இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் வாழும் அனைத்து வெளிநாடுகளிலும் உள்ள முருகன் கோயில்களில் வழிபாட்டின் ஒரு முக்கிய அம்சமாக காவடியாட்டம் கருதப்படுகிறது.

முருகன் கோயிலுக்குச் சென்று காவடி எடுப்பதாக பக்தர்கள் நேர்த்தி வைப்பது உண்டு. ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் காவடியாட்டத்தில் பங்கேற்பது வழக்கம். வழிபாட்டின் கூறாகத் தோன்றிய காவடியாட்டம் பிற்காலத்தில் தொழில்முறை ஆட்டமாகவும் வளர்ச்சி பெற்றது.

எனினும் வழிபாடு தொடர்பான காவடியாட்டம் அல்லது காவடியெடுத்தல் இன்னும் பரவலாகப் புழக்கத்தில் இருந்து வருகிறது. காவடியாட்டத்துக்கான பின்னணி இசைக் கருவிகளாக நாதஸ்வரமும், தவிலும் விளங்குகின்றன. வழிபாடு தொடர்பான காவடி எடுத்தலில், குறிப்பாக நேர்த்தி வைத்துக் காவடி எடுத்தலில், தங்களை வருத்திக்கொள்ளும் நடைமுறைகளைக் காண முடியும்.

சிலர் ஏறத்தாழ ஆறு அங்குல நீளம் கொண்ட வெள்ளி வேல்களை ஒரு கன்னத்திலிருந்து மறு கன்னத்தினூடாக வரும்படி குத்திக்கொண்டும், இன்னொரு சிறிய வேலை நாக்கினூடாகக் குத்தியபடியும் காவடி எடுப்பர். இது அலகு குத்துதல் எனப்படும். தவிர தூண்டில் போல் வளைந்த வெள்ளி ஊசிகள் பலவற்றை முதுகில் வரிசையாகக் குத்தி அந்த ஊசிகளுடன் இணைக்கப்பட்ட கயிறுகளை இன்னொருவர் பிடித்து இழுத்தபடி இருக்கக் காவடி ஆடுவர்.

இது செடில் குத்துதல் எனப்படுகிறது. இது தவிர உடலின் பல்வேறு பகுதிகளில் வளைந்த வெள்ளி ஊசிகளைக் குத்தி அவற்றுடன் இணைக்கப்பட்ட கயிறுகளின் மூலம் காவடி எடுப்பவரை, சில்லுகள் பொருத்தப்பட்ட வண்டிகளில் கட்டப்பட்ட உயர்ந்த அமைப்புகளிலிருந்து தொங்கவிட்டபடி ஊர்வலமாகக் கொண்டு செல்வர்.

காவடி எடுப்பவர் முகம் கீழிருக்கும்படி படுக்கை நிலையில் தொங்கினால் அது பறவைக் காவட எனப்படும். இருக்கும் நிலையில் தொங்குவது தூக்குக் காவடி ஆகும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *