Loading

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 2006-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். எனவே, 2019-ல் பாலாலயம் செய்யப்பட்டு, கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், கரோனா ஊரடங்கால் கும்பாபிஷேகம் தள்ளிப்போனது. பல கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த 18-ம் தேதி கும்பாபிஷேக பூர்வாங்கப் பூஜைகள் தொடங்கின.

இதையொட்டி, இரண்டு யாகசாலைகளில், 90 வேள்விக் குண்டங்கள் அமைக்கப்பட்டன. 108 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, கும்பாபிஷேக வேள்வி நடைபெற்றது. கங்கை, யமுனை, காவிரி, கிருஷ்ணா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தம், 500 கலசங்களில் நிரப்பி வைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினர்.

நேற்று அதிகாலை 4.15 மணிக்கு 8-ம் கால வேள்வி தொடங்கியது. தொடர்ந்து, யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோயிலைச் சுற்றி வந்தனர். அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அர.சக்கரபாணி, சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கொடியசைக்க, காலை 8.45 மணிக்கு ராஜகோபுரம், தங்க கோபுரம் மற்றும் அனைத்து சந்நிதி கோபுரங்கள், விமானங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

அப்போது தமிழ், சம்ஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓதப்பட்டன. தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நீர் தெளிப்பான் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அங்கு குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா அரோகரா’ என்று முழக்கமிட்டனர்.

கும்பாபிஷேகம் முடிந்த சில நிமிடங்களில் ஹெலிகாப்டரில் இருந்து ராஜகோபுரம் மற்றும் தங்ககோபுரங்கள் மீது மலர்கள் தூவப்பட்டன.விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், கிருஷ்ணகுமார், வேல்முருகன், மகாதேவன் உள்ளிட்ட 16 நீதிபதிகள், அறநிலையத் துறைச் செயலர்சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், வேலுச்சாமி எம்.பி., காந்திராஜன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் ச.விசாகன், கோயில் இணை ஆணையர் நடராஜன், அறங்காவலர் குழுத் தலைவர் சந்திரமோகன், கந்தவிலாஸ் நிறுவனர் என்.செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில், 2 டிஐஜி-க்கள்,7 மாவட்ட எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் 2,800 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

விழாவைக் காண திரண்ட பக்தர்கள்.

6,000 பேர் அனுமதி

முக்கியப் பிரமுகர்கள், நன்கொடையாளர்கள், பத்திரிகையாளர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் உள்ளிட்ட 6,000 பேர் மட்டுமே மலைமீது அனுமதிக்கபட்டனர். இதையொட்டி, படிப்பாதை மற்றும் யானைப் பாதையின் வாயில்கள் மூடப்பட்டன. மலைக் கோயிலுக்கு வர முடியாத பக்தர்கள், கிரிவீதி, பேருந்து நிலையப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த எல்இடி திரையில் கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.

அதேபோல, அடிவாரத்தைச் சுற்றிலும் உள்ள வீடுகளின் மாடிகளிலும், தெருக்களிலும் நின்றபடி பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். பக்தர்களுக்காக கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி, யூ-டியூப் சேனல்கள் மூலம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.

அனுமதிக்கப்பட்ட 6,000 பேரும்கீழே இறங்கியதும், வழக்கம்போல அனைத்து பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். திண்டுக்கல், தேனி, மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு விபூதி, குங்குமம், முருகன் படம், பஞ்சாமிர்தம், புனித தீர்த்தம் அடங்கிய பிரசாதப் பை வழங்கப்பட்டது.

மேலும், காலை 7 மணி முதல்இரவு 10 மணி வரை மூன்று இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சண்முகர், வள்ளி, தேவசேனா திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மணக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி, தம்பதி சமேதராய் கோயில் வெளிப் பிரகாரத்தில் வலம் வந்தார். தொடர்ந்து, இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கடந்த 23-ம் தேதி முதல் 26-ம்தேதி வரை மூலவர் தரிசனம் இல்லாதது, கும்பாபிஷேகத்துக்கு குறைந்த பக்தர்களை மட்டுமே அனுமதித்தது உள்ளிட்ட காரணங்களாலும், தைப்பூசத் திருவிழாவையொட்டியும் இன்று முதல் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *