Loading

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் கிராமத்தில் அமைந்துள்ள  வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் கிராமத்தில் 1,300 ஆண்டுகள் முன்னர் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான பெருந்தேவி தாயார் சமேத  வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் அளகேசன் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், ஆண்டுகள் பல கடந்ததால் கோயில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, மூலவர் விமானம் உட்பட கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சுவாமிகளின் சந்நிதிகளிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சீரமைப்பு பணிகளை ஓ.வி.அ.வாமனன், சசிகலா வாமனன் குடும்பத்தினரின் சொந்த முயற்சியில் நடத்தப்பட்டது.

கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்படுகிறது.

படங்கள்:எம்.முத்துகணேஷ்

இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக, கோயில் முகப்பில் யாகசாலை அமைத்து சிறப்பு வேள்விகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

மேலும், நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், காலை 9.30 மணியளவில் மஹா பூர்ணார்த்தி மற்றும் கும்ப புறப்பாடுகள் நடைபெற்றன. பின்னர், தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் மற்றும் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் முன்னிலையில் காலை 10 மணியளவில் யாகசாலையில் ஆராதனைகள் செய்யப்பட்ட புனித கலச நீர் மூலவர் விமானத்தில் உள்ள கலசத்தின் மீது அர்ச்சகர்கள் மூலம் ஊற்றப்பட்டது.

அப்போது, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டனர். இதையடுத்து, மூலவருக்கு தீபாரதனை, சாற்றுமுறை மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், ஒழலூர் கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *