திருமலை: தெலங்கானா மாநில முதல்வராக இருப்பவர் சந்திரசேகரராவ். இவர் தனது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தேசிய அளவில் கொண்டு செல்லும் விதமாக, கட்சியின் பெயரை ‘பாரத் ராஷ்டிரிய சமிதி’ என மாற்றியுள்ளார். கடந்த வாரம் கம்மம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ் உள்பட தேசிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் ‘பாரத் ராஷ்டிரிய சமிதி’ கட்சியை தேசிய அளவில், அனைத்து மாநிலங்களிலும் கொண்டு செல்லும் விதமாக சந்திரசேகரராவ் வியூகம் வகுத்து வருகிறார். இதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து தனது கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டு வருகிறார். அதன்படி கர்நாடகாவில் ஏற்கனவே நடிகர் பிரகாஷ்ராஜ் மூலம் தனது கட்சியை கொண்டு சென்ற நிலையில், முன்னாள் முதல்வர் குமாரசாமியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சமத்துவமக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார், சந்திரசேகரராவ் மகளும், எம்எல்சியுமான கவிதாவை நேற்று திடீரென சந்தித்தார். சால்வை மற்றும் நினைவுப்பரிசு வழங்கினார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை எம்எல்சி கவிதா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியை தமிழகத்தில் வலுப்படுத்தும் விதமாக சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்து செல்வதற்காக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதா? என அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பு எழுந்துள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *