போகர் என்றாலே முதலில் அவரது சித்த வைத்தியம்தான் நினைவுக்கு வரும். பிறகு, அவரால் ஸ்தாபிக்கப்பட்ட பழநி ஸ்ரீதண்டாயுதபாணி ஸ்வாமியின் நவபாஷாண விக்கிரகம்!

இந்த விக்கிரகத்துக்குப் பின்னாலே உணர முடிந்த அளவுக்கும், உணரமுடியாத அளவுக்கும் ஏராளமான நுட்பங்கள் உள்ளன. போகர் மற்ற முனிவர்களின் வழிகாட்டுதலிலும், தன் தேடலிலும் மருத்துவ முறைகளை உலகுக்கு அளித்தது ஒருவிதம் என்றால், ஸ்ரீதண்டாயுத பாணி ஸ்வாமியை அளித்த விதம் ஓர் அற்புதமாகும்.

எவ்வளவோ தெய்வ வடிவங்கள் இருக்க, முருகப்பெருமானின் உருவத்தினை இவர் ஏன் வடிக்க வேண்டும்? முருகன் என்றால் அழகன் என்று பொருள். அவன் வெறும் அழகன் மட்டுமல்ல்; நல்லதோர் தமிழழகனும்கூட! அவனது ஆறுமுகமும், பன்னிரு கரமும், அதன் கூட்டான பதினெட்டும் நம் உயிர்மெய் எழுத்துக்களை நினைவூட்டுபவை. அவனது வேல், கூரிய அறிவின் சின்னம். இப்படிப்பட்டவனை ஆண்டிக் கோலத்தில் வடிக்கவேண்டிய அவசியம் ஏன்? இப்படிப் பல கேள்விகள் நம்முள் எழலாம்.

இந்திரா சௌந்தர்ராஜன்

முருகப்பெருமானின் திருவிளையாடல் கதை ஒன்றும், அதில் அவன் கோபித்துக்கொண்டு பழநி மலை மேல் வந்து நின்றுகொண்டதால் அந்த மலை ‘பழநி மலை’ என்றாயிற்று என்கிற புராண வரலாறு ஒருபுறம்; போகர் வேல்முருகனை தண்டபாணி யாகச் சிந்தித்து வந்தித்து, அப்படி வந்தித்த உருவை நவபாஷாணத்தில் உருவாக்கியதன் பின்னாலே, மிகவே நுட்பமான காரண காரியங்கள் உள்ளன.

போகர், உயிர் வாழ்க்கைக்கு இடையூறான நோய்களை வெல்லும் வழிமுறையைக் கண்டறிந்தார். பஸ்பங்கள், காயகற்பங்கள், மூலரசங்கள், குளிகைகள்… என்று எல்லாம் கண்டறிந்தும், மனித இனம் அதனாலேயே கடைத்தேறிவிடும் என்று அவர் நம்பவில்லை.

இவை எல்லாமே அருளுள்ளவர்களுக்கே என்பதுதான் அவர் இறுதியில் அறிந்து கொண்ட பேருண்மை. வியாதியும்- மூப்பும், நரையும்- திரையும் கர்மத்தால் வருபவை. அப்படி அவை வருவதை எது கொண்டும் தடுத்து நிறுத்த போகரால் முடிய வில்லை.

இந்த உலகின் எல்லாவிதமான மாயா சுகங்களையும் பெரிதாகக் கருதி, இதில் லயித்திருக் கவே எல்லோரும் விரும்பினார்கள். போகரிடமே சிலர் ‘சிற்றின்பத்தில் ஈடுபடும் போது அது நிலைத்திருக்க வழியுண்டா? அதற்கான மருந்து உங்கள் வசம் உள்ளதா?’ என்று கேட்டனர். ‘இளமையோடு இருக்க வழி சொல்லுங்கள்; முதுமையே வரக் கூடாது’ என்றனர். புலன் அடங்கியும், புலன் அடக்கியும் வாழும் வாழ்க்கையைவிட மனம் போன போக்கில் வாழவே எல்லோரும் விரும்பினர். இன்றும் அதுதான் வாழ்வின் நிலை!

பழநி – போகர்

இதைக் கண்ட போகரும், ‘எதை அறிந்தும் பயனில்லை. இறையருள் இல்லையேல் எவராலும் கடைத்தேற முடியாது’ என்பதையே இறுதியாக உணர்ந்து கொண்டார். அருளற்றுப் போகும்போது மெள்ள பொருளற்றுப் போகிறது. பொருளற்றுப் போகப் போக, இருளுற்றவர்கள் ஆகிறோம். இந்த இருளுக்குள் விழுந்தவர்களுக்கான ஒளியை எதனால் தரமுடியும்? இந்தக் கேள்வியோடும் மெய் வருத்தத்தோடும் அவர் தவத்தில் மூழ்கவும் – குறிப்பாக, சித்தர்கள் சக்தியை வாலையாக, கன்னிக்குமரியாக வழிபடும் விதத்தில், அவர் வழிபட்டு தவத்தில் மூழ்கவும் – அவருக்கு அந்த ஆதிசக்தியின் தரிசனம் கிட்டியது.

‘போகா… உன் நோக்கம் மிக உயர்ந்தது. நீ அறிந்த எதுவும் வீண் போகாது. ஆயினும், இவை எல்லாம் நோயுற்றவர்க்கே! பிறவி எனும் நோயுற்றவர்க்கும் நீ ஒரு மருந்தை உருவாக்கு. அந்த மருந்துதான் முருகு. முருகன், சக்தியும் சிவமுமானவன்; மாலின் காக்கும் குணப்பாடும் உடையவன். சத்தும் சித்துமாய் வள்ளி- தேவானையை உடன் கொண்டவன். அவன் குழந்தைக்குக் குழந்தை; பிள்ளைக்குப் பிள்ளை; காளைக்குக் காளை; ஞானத்திலும் பரிபூரணன்; அப்பனுக்கே பாடம் சொன்னவன்!

மொத்தத்தில் வானவர்க்கும், தேவர்க்கும், பூதவர்க்கும், ஞானியர்க்கும் என்று, எவர்க்கும் எளியவன், இனியவன். நவகோள்களோடும் தொடர்புடையவன். எனவே, அக்கோளின் குணம்கொண்ட பாஷாணங்களால் அவனை வடிவாக்கு. மற்றவை, அந்த உருவம் உருவாகுங்கால் உனக்கே தானாகப் புரியும்…’ என்று கூறி மறைந்தாள்.

போகருக்கும் அப்போதுதான், ‘பிறந்துவிட்டவர்க்கு மருந்தை அறிந்த எனக்கு, பிறப்புக்கே மருந்து இருப்பது தெரியாமல் போனதே’ என்பது புரிந்தது.

நவபாஷாணங்களால் முருகப்பெருமானும் தண்டபாணியாக எழும்பி நிற்க ஆரம்பித்தான்.

பழநியம்பதியில், சண்முக நதிக்கரையில் ஆஸ்ரமம் கண்ட நிலையில், நவபாஷாணங்களைக் கொண்டு அந்த ஆதிசக்தி தேவி யின் கட்டளைக்கு ஏற்ப, அவளது சக்திச் சுடரானது பொய்கையில் விழுந்து, பின் குளிர்ந்து, மலர்ந்து எழுந்து, கார்த்திகைப் பெண்களால் ஆராதிக்கப்பட்டு, அதற்கும் பின் ஆறும் கூடி ஒன்றாகிய ஆறுமுகனை- கார்த்திகேயனை- அழகனை, அதன் காரணப்பெயரான முருகனை தண்டபாணியாக தன்னுள் வாங்கி, அந்த ஆண்டிக்கோலத்தையே உருவாக்குகிறார் போகர்.

இந்த ஆண்டிக்கோலத்தின் பின்னால் உள்ள புராணச் சங்கதியை நாம் எல்லோருமே ஓரளவு அறிவோம். ஒரு மாம்பழத்துக்காக விளைந்த சண்டையில் விநாயகப் பெருமான் முந்திக்கொள்ள, தான் பிந்திவிட்டதால் உண்டான கோபத்தோடு, பிஞ்சு பாலகனாக முருகன் திகழ்ந்தபோதே துறவிக்கோலத்துக்குத் தாவி, அந்த கோலத்தோடு அவன் பூவுலகில் வந்து நின்ற இடம்தான் பழநி.

காக்கும் கடவுளாம் மாலுக்கு மருகன். கூட்டிக் கழித்துப் பார்த்தால் சிவமும் சக்தியும், மாலும் கணபதியும், முருகனுக்குள் அடங்கியும், ஆனந்தமாய்க் கலந்தும் இருப்பதை நாம் உணர முடியும். இந்திரன் மகளான தேவயானையை மணக்கப் போய், தேவர் உலகின் மாப்பிள்ளையாகி, அவர்களாலும் துதிக்கப்படுபவன் முருகன்.

இத்தனைப் பெரியவனுக்கு மண்ணுலகில் எத்தனையோ கோயில்கள்! அதிலெல்லாம் அவனை நாம் நம் விருப்பத்துக்கு ஏற்பவும் அந்தத் தலத்தின் நோக்கத்துக்கு ஏற்பவும் வடிவமைத்தோம். ஆனால், பழநியில் அவனுக்கினிய கோலம், பற்றற்ற ஆண்டிக் கோலம்தான். அதுவே, பூவுலகில் முக்தி பெறவும் உற்ற வழிகாட்டவும் கூடியது என்று உணர்த்தவே ஆண்டியாய்- தண்டபாணியாய் வந்து நின்றான் என்பர்.

மண்மிசை பழநிமலை மேல் அக்கோலம் கொள்ள விஞ்ஞான பூர்வமாகவும் பூகோள ரீதியாகவும் சில காரணங்கள் கூறப் படுகின்றன. அதன்படி பார்த்தால், நவகோள்களில் ஒன்றான செவ்வாய் என்னும் சிவந்த கோளின் நேரான வீச்சு பழநிமலை மேல் பட்டுத் தெறிப்பதாகவும், அந்தக் கோளின் தலைவனான முருகன் அந்த மலைமேல் நின்ற நிலையில் அதன் வீச்சை அவன் தன்னுள் வாங்கி, பின்… ஆகம விதிப் படியால் ஆன பூஜைகளால் அருள் அலைகளாக ஆக்கி, அதை பக்தர்களுக்கு அன்றாடம் வழங்கிக் கொண்டிருப்பதாகவும் ஒரு கருத்து உண்டு.

பழநி கோயில்

செவ்வாயின் வீச்சை ஒரு கற்சிலை உள்வாங்கு வதைவிட, பாஷாணம் உள்வாங்கி வெளியிடுவதில் பற்பல ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்திட இடம் இருக்கிறது. இதனாலேயே போகர்பிரானும் நவபாஷாணத்தால் இந்தச் சிலையை உருவாக்கினார். இந்த பாஷாணங்கள் ஒவ்வொன்றுமே ஒரு கோளை பிரதிபலிக்கும். ஒன்பது கோள்களே ஒன்பது பாஷாணங்கள். மனித வாழ்வும் ஒன்பது கோள்களாலேயே வழி நடத்தப்படுகிறது. பழநி முருகனை வணங்கிடும் நிலையில், இந்தக் கோள்களையும் வணங்கிய ஒரு பரிகாரார்த்தம் ஏற்படுகிறது என்போரும் உண்டு.

மானுடர்கள் இப்படிப் பரிகாரார்த்தம் புரியவும், யோகியர் தங்களின் ஞானத் தலைவனாகக் கருதவும் இந்தத் தண்டாயுத பாணி காரணமாக விளங்கிவருகிறான். நவபாஷாணத்துக்கு என்று குணப்பாடு உண்டு. விஷத்துக்கு எதிரானது அமிர்தம். இது, வாழ்வாங்கு வாழ வைப்பது. விஷமோ அழிப்பது.

நவபாஷாண தண்டபாணியும் தன்னை தரிசிப்பவரின் விஷமாகிய அஞ்ஞானத்தை தான் ஏற்று அழிக்கிறான். அஞ்ஞானம் அழிந்தாலே மெய்ஞ்ஞானம் தோன்றிவிடும். அவனை தரிசித்த மாத்திரத்தில் அங்கு நிலவும் கதிர்வீச்சால் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். அவன் திருமேனி அபிஷேகப் பிரசாதம் நம் வரையில் அமிர்தமாய் நம்மை அடைகிறது. அவன் திருமேனி படும் விபூதியும் மருந்தாகி நமக்கு நலம் தருகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *