Loading

திருச்சி: ரவுடிகளிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையில் ராமஜெயம் அணிந்திருந்த நீலக்கல் மோதிரம் மாயமானது தொடர்பான கேள்வி முக்கிய இடம் வகித்ததாகவும், இன்னும் 2 வாரங்களில் இது தொடர்பான அறிக்கை திருச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான ராமஜெயம் கடந்த 29.3.2012-ம் தேதி திருச்சி-கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியிலுள்ள முட்புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் (எஸ்ஐடி) விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தின் பிரபல ரவுடிகளான திருச்சி சாமி ரவி (எ) குணசேகரன்(46), ஸ்ரீரங்கம் ராஜ்குமார் (32), டால்மியாபுரம் சிவ குணசேகரன் (33), திலீப்குமார் (எ) லட்சுமி நாராயணன் (31), சீர்காழி சத்யா (எ) சத்யராஜ் (40), குடவாசல் எம்.ஆர்.சண்முகம் (எ) தென்கோவன்(44), மணல்மேடு கலைவாணன், திருவாரூர் மாரிமுத்து(40), திண்டுக்கல் மோகன்ராம்(42), நரைமுடி கணேசன்(44), தினேஷ்குமார்(38), சிதம்பரம் சுரேந்தர்(38), சிதம்பரம் லெப்ட் செந்தில் ஆகிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

இவர்களில் தென்கோவன் தவிர மற்ற அனைவரும் ஒப்புக் கொண்டதால், 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த ஜே.எம்.6 நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சாமி ரவி, நரைமுடி கணேசன் உள்ளிட்ட 12 பேருக்கும் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

டெல்லியிலிருந்து வந்திருந்த மத்திய தடயவியல் துறை நிபுணர்கள், ரவுடிகள் 12 பேரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கு பதில் பெற்றுள்ளனர். இதில், ராமஜெயம் அணிந்திருந்த நீலக்கல் மோதிரம், அவர் கொலை செய்யப்பட்ட பின் காணாமல் போனது குறித்த கேள்வி முக்கிய இடம் பிடித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறும்போது, ‘‘ரவுடிகளின் செயல்பாடுகள், தொடர்புகளுக்கு ஏற்ற வகையில் தனித்தனியாக கேள்விகள் இடம் பெற்றிருந்தன. சிறப்பு புலனாய்வு குழுவினர் அளித்த பட்டியலில் இருந்த கேள்விகளுடன், மத்திய தடயவியல் துறை அதிகாரிகள் தாங்களாகவே கூடுதலாக பல கேள்விகளை ரவுடிகளிடம் கேட்டு, அவற்றுக்கு பதில்களைப் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, ராமஜெயம் அணிந்திருந்த நீலக்கல் மோதிரம் கொலையான இடத்தில் கிடைக்கவில்லை. கொலை செய்தவர்கள் ஒருவேளை அதை திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. எனவே அந்த மோதிரம் தற்போது யாரிடமாவது உள்ளதா என தெரியவந்தால், அதன் மூலம் இந்த வழக்கை ஒரு முக்கிய கட்டத்துக்கு நகர்த்திவிட முடியும் என்பதால் உண்மை கண்டறியும் சோதனையின் போது 12 ரவுடிகளிடமும் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கேள்விகள், பதில்கள் தொடர்பான அறிக்கை தடய அறிவியல் துறையினரால் இன்னும் 2 வாரங்களில் திருச்சி ஜே.எம்.6 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்குபிறகே, ரவுடிகளின் பதில்கள் தெரியும் என்பதால், சிறப்பு புலனாய்வு பிரிவினரும் இந்த அறிக்கைக்காக காத்துள்ளனர்’’ என்றனர். ராமஜெயம் அணிந்திருந்த நீலக்கல் மோதிரம் கொலையான இடத்தில் கிடைக்கவில்லை. கொலை செய்தவர்கள் திருடிச் சென்றிருக்கலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *