கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
கோவில்பட்டி பசுவந்தனை சாலையைச் சேர்ந்த முனியசாமி மகன் பாரதி சங்கர் (38). இவரது சகோதரியின் கணவர் சுப்பிரமணியன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். சுப்பிரமணியனுக்கு சொந்தமான 1.19 ஏக்கர் நிலம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் உள்ளது. இந்த நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்ய டிடிசிபி அங்கீகாரத்தை பெற்றுள்ளார். இந்த வீட்டுமனைகளுக்கு இடையே மின் கம்பங்களுடன் வயர்கள் செல்கின்றன. இதனை ஒழுங்குபடுத்துவதற்காக நாலாட்டின்புதூர் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி மனு அளித்தார். இந்த மனுவுக்கு 13-ம் தேதி ரூ.236 தொகை செலுத்தினார்.
இந்நிலையில், நாலாட்டின்புதூர் மின்வாரிய இளநிலை பொறியாளர் பி.எஸ்.பொன்ராஜா (56), மின் வயர்களை மாற்றி அமைக்க மதிப்பீடு செய்து, மின்வாரிய செயலியான ERP-யில் பதிவேற்றம் செய்ய பாரதி சங்கரிடம் ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளார். இந்தப் பணத்தை கொடுக்க பாரதி சங்கர் மறுத்ததால், ரூ.5 ஆயிரம் கேட்டுள்ளார். இதனை பாரதி சங்கர் ஏற்றுக்கொண்டார். ஆனால், பணத்தைக் கொடுக்க விருப்பம் இல்லாத பாரதி சங்கர், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுரையின்படி இன்று காலை பாரதி சங்கர் நாலாட்டின்புதூர் மின்வாரிய அலுவலகத்தில் பணியில் இருந்த இளநிலை பொறியாளர் பொன் ராஜாவிடம் ரசாயனம் தூவிய பணத்தை வழங்கினார். இதனை அவர் பெற்றுக் கொண்டபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜி.ஹெக்டர் தர்மராஜ், ஆய்வாளர் எம்.சுதா தலைமையிலான போலீஸார் இளநிலை பொறியாளர் பொன் ராஜாவை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்து தூத்துக்குடிக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் இளநிலை பொறியாளர் பொன் ராஜா வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.