மேரி கோம் தலைமையில் குழு!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த ப்ரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார்களை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராகப் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் செயல்படுவார். மேலும் ஒரு மாதத்திற்குக் கூட்டமைப்பின் தினசரி செயல்பாடுகளையும் இந்த குழு நிர்வகிக்கவுள்ளது.

4000 கோடியில் ஐந்து அணிகள்!
மகளிர் ஐ.பி.எல் போட்டியின் அணிகளுக்கான ஏலம் நாளை நடைபெறுகிறது. பல முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்ளும் ஏலத்தில் 4000 கோடி மதிப்பில் ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. ஐபிஎல் போட்டிகளால் நல்ல லாபம் வரும் என்பதால் அணிகளைப் போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கத் திட்டமிட்டுள்ளனர். இதனால் பிசிசிஐக்கு நல்ல வருவாய் ஈட்டும் தருணமாக இது அமைந்துள்ளது.
மைதானத்தில் திரண்ட ரசிகர் கூட்டம்!
ஹாக்கி உலகக்கோப்பையில் காலிறுதிக்குக் கூட முன்னேறாமல் இந்திய அணி வெளியேறிய போதிலும், மற்ற நாடுகளின் போட்டியைக் காணவும் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இதனால் கலிங்கா மைதானமே நிறைந்து காணப்படுகிறது.
வீரர்களின் பணிச்சுமை கவனிக்கப்படும்!
இந்த ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச ஒருநாள் உலகக்கோப்பை இந்தியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரர்களின் பங்கு குறித்த கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், வீரர்களின் பணிச்சுமை கருத்தில்கொள்ளப்படும். மேலும் நடந்த டி20 போட்டிகளில் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. வீரர்களுக்குக் காயம் ஏற்படாமல் ஃபிட் ஆக இருக்கும்வரை அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள் என்றார்.

சென்னையில் ஜடேஜா!
‘வணக்கம் சென்னை’ என ஜடேஜா சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார். தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் ஆடுவதற்காக சென்னை வந்ததையே ஜடேஜா இப்படிக் குறிப்பிட்டிருந்தார். இந்த ரஞ்சி போட்டி இப்போது சேப்பாக்கத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்யும் நிலையில் ஜடேஜா முதல் செஷனின் கடைசிக்கட்டத்தில் பந்து வீச வந்து டைட்டான லைன் & லெந்த்தில் கச்சிதமாக வீசி வருகிறார்.