
கோப்புப் படம்
இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஆளும் தி.மு.க. தனது கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கே இந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட உள்ளார். அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இருந்தாலும் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
அமமுக சார்பில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் அமமுகவைச் சேர்ந்தவர்கள், வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே பிரசாரத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணியினரிடையே போட்டி நிலவி வரும் நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.