புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மனிதக் கழிவு கலக்கப்பட்ட பழைய குடிநீர்த் தொட்டியில் இருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது.

குடிநீர் தொட்டியில் மனித கழிவு: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரியும், சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடிக்கவும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டு அமைப்புகளின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வேங்கைவயலில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

மனித கழிவு கலக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சுற்றி தடுப்புகளை அமைத்துள்ள காவல் துறையினர்

​​​

சிபிசிஐடி விசாரணை: இந்தச் சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் விசாரித்து வந்தனர். எனினும், இந்தச் சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படாததால், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு ஜன.14-ம் தேதி மாற்றியது.

60 பேரிடம் விசாரணை: இதைத்தொடர்ந்து, சிபிசிஐடி திருச்சி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி பிரிவின் 35 பேரை உள்ளடக்கிய 10 தனிப்படையினர் வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சிபிசிஐடி எஸ்.பி தில்லைநடராஜனும் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டார். மேலும், ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த வெள்ளனூர் காவல் நிலையத்தினரிடமும் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இதுவரை மொத்தம் 60 பேரிடம் விசாரணை செய்துள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

விரைவில் இறுதிக்கட்ட விசாரணை: மேலும், இந்த விசாரணை குறித்து, “மற்ற வழக்குகளில் மேற்கொள்ளப்படும் நடைமுறையை போன்று இந்த வழக்கைப் பார்க்க முடியாது. விசாரணைக்கு உட்படுத்தப்படுவோர் அளிக்கும் விவரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படுகிறது. அது மட்டுமின்றி, விசாரணையில் கிடைக்கும் தகவல்களை முடிந்தவரை அறிவியல் தொழில்நுட்பத்துடன் பொருத்திப் பார்த்து, உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனினும், விரைவில் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டும் என தெரிவித்திருந்தனர்.

கட்டுமானப் பணிகள் தீவிரம்: அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அன்னவாசல் ஒன்றிய அலுவலகத்தின் மூலம் தற்போதுள்ள தொட்டியில் இருந்து சுமார் ஒரு நூறு மீட்டர் தொலைவில், புதிய குடிநீர் தொட்டியின் கட்டுமானப் பணிகள் கடந்த 15 நாட்களாக தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கான நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லாத நிலையில், பொதுமக்களின் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு இந்தப் பணி தொடங்கப்பட்டிருந்தது.

ரூ.9 லட்சம் நிதி: இந்நிலையில், தனது தொகுதி நிதியில் இருந்து புதிதாக தொட்டி கட்டுவதற்கு ரூ.9 லட்சம் நிதியை புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக மாநிலங்களை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா பரிந்துரை செய்து, மாவட்ட ஆட்சியருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *