மதுரை: “அண்ணாமலையின் யாத்திரையே பாஜக அரசுக்கு இறுதி யாத்திரையாக அமையப் போகிறது” என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷணன் கூறியுள்ளார்.

மதுரையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தி “எங்கள் எய்ம்ஸ் எங்கே” என்னும் தொடர் முழக்கப் போராட்டம் பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை எம்.பி.யுமான சு.வெங்கடேசன் தலைமை வகித்தார்.

எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர் (விருதுநகர் தொகுதி), நவாஸ்கனி (ராமநாதபுரம் தொகுதி), எம்எல்ஏக்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிறைவுரை ஆற்றி பேசினா்.

அப்போது அவர் பேசியதாவது: “பிரதமர் மோடி எப்போது பேசினாலும் இது இரட்டை இஞ்சின் அரசாங்கம் என்று அடிக்கடி பேசுவார். ஏனென்றால் இரட்டை இஞ்சின் வேகத்திற்கு செயல்படுவதாக கூறுவார். ஆனால் பிரதமர் மோடி தமிழகத்தில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி 4 ஆண்டுக்கு மேலாகியும் ஏன் இரட்டை இஞ்சின் வேகத்திற்கு செயல்படும் அரசாங்கம் ஏன் நிதி ஒதுக்கவில்லை.

வரும் 2024 தேர்தலில் தமிழகத்திற்கு பிரச்சாரத்துக்கு வரும் போது பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க தயாராகி வருகின்றனர். இன்று காலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியிடம் பேசும்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் வரைபடமே (புளூபிரிண்ட்) தயாரிக்கவில்லை, அதற்கான டெண்டரே மார்ச் மாதத்தில் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக கூறினார்.

அதற்குப்பின் குளோபல் டெண்டர் விட்ட பின்னர்தான் கட்டுமானப் பணிகள் தொடங்கும். ஆக 2024 தேர்தல் வரும் வரைக்கும் மத்திய அரசு எய்ம்ஸூக்காக பிடி மண்ணைக்கூட அள்ளப்போவதில்லை என்பது தெளிவாகிகிறது. இதற்கிடையில், பாஜக மாநில தலைவர் பாதயாத்திரை பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார். அந்த அண்ணாமலைக்கு ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன், எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் மேற்கொள்ளும் யாத்திரை மோடி அரசுக்கு இறுதி யாத்திரையாக அமையப்போகிறது. யாத்திரையின் போது எப்படியும் மதுரைக்கு வருவீர்கள், அப்போது, எய்ம்ஸ் எங்கே என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள். மதுரையோடு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு முடிவடையும் நிலையிலுள்ளன.

மதுரைக்குப்பின் 2 ஆண்டுக்குப்பின் அறிவிக்கப்பட்ட இமாச்சல் பிரதேசத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறப்புவிழா நடத்த விருக்கின்றனர். ஆனால் தமிழகம் உங்களுக்கு என்ன துரோகம் செய்தது, தமிழ்நாட்டு மக்கள் என்ன பாவம் செய்தார்கள். ஏன் இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்க வில்லை.

மற்ற மாநிலங்களுக்கெல்லாம் மத்திய அரசு நிதி ஒதுக்கும்போது, தமிழகத்துக்கு மட்டும் ஜப்பானிடமிருந்து கடன் கேட்பது ஏன். உங்களின் சனாதன கொள்கைகளை வேரோடு அறுத்தெடுப்பதால் தமிழகத்தை பழிவாங்குகிறீர்களா. ஜிஎஸ்டி வரியாக அதிகமாக செலுத்தும் தமிழகத்திற்கு ஏன் நிதி ஒதுக்கமறுக்கிறீர்கள். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்ற போது, உலக வங்கியிடமிருந்து 21 ஆயிரம் கோடி கடன் பெற்றுத்தர ஜாமீன் கொடுப்பதாக இலங்கை அரசிடம் உறுதி அளிக்கிறார்.

கடந்த பாஜக ஆட்சியில் 8 ஆண்டுகளில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அதானி, அம்பானி உள்ளிட்ட பெருநிறுவனங்களுக்கு பத்தே முக்கால் லட்சம் கோடியை வராக்கடனாக தள்ளுபடி செய்திருக்கின்றார். ஏகபோக முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்யும் மத்திய பாஜக அரசு, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெறும் 2 ஆயிரம் கோடியை ஒதுக்க மறுப்பது ஏன்.

பணமில்லை என்பது காரணமல்ல,தெரிந்தே நம்மை பழிவாங்குகின்றனர். வேண்டுமென்றே எய்ம்ஸ் திட்டத்தை மத்திய பாஜக அரசு கிடப்பில் போட்டிருக்கிறது. தமிழ்நாடு என்ற பெயரை அழிக்க வேண்டும் என ஆளுநர் விரும்புகிறார். ஆனால் பிரதமர் மோடி, தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் செய்யாமல் அழிக்க நினைக்கிறார்.

தமிழகத்திற்கு என பாரம்பரியம் உண்டு, தமிழகத்தை சீண்டிப்பார்த்தால், உரசிப்பார்த்தால் கிளர்ந்தெழும். தமிழகத்தை அழிக்க கங்கணம் கட்டி செயல்படும் மோடி அரசுக்கு சாவு மணி அடிக்க தமிழகம் தயாராக இருக்கிறது. லண்டன் பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படத்தில், குஜராத்தில் நடந்த இஸ்லாமியர்கள் படுகொலைக்கும் மோடிக்கு நேரடி தொடர்பிருப்பதாக ஆவணங்களுடன் வெளியிட்டிருக்கிறது.

ஆவணப் படம் வெளியான அரை மணிநேரத்தில் மத்திய அரசு அதற்கு தடை விதித்திருக்கிறது. தற்போது அதிகாரங்களை பயன்படுத்தி அந்த ஆவணப்படத்தை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் 2024 மக்களவைத் தேர்தல் காலத்தில் அந்த ஆணப்படம் வீடுவீடாக வரப்போகிறது. அப்போது பிரதமர் மோடியின் முகத்திரை கிழிக்கப்படும்.

மோடி ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். இந்திய நாட்டு மக்களை இனிமேல் உங்களை அனுமதிக்கப்போவதில்லை. தமிழகத்தில் அதிமுக என்றொரு கட்சி இருக்க வேண்டுமா?. முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி, ஓபிஎஸ் ஆகிய இருவரும், எய்ம்ஸ் வரப்போகிறது என பேசினார்கள். தற்போது ஏன் வாயை திறக்க மறுக்கிறீர்கள்.

அதிமுக கட்சி மோடிக்கு அடிமைகளாக, கைப்பாவையாக மாறியிருக்கிறது. அடிக்கல் நாட்டும் போது ஆட்சியிலிருந்த அதிமுகதான் எய்ம்ஸூக்கு ஏன் நிதி ஒதுக்க மறுக்கிறீர்கள் என பாஜகவை கேட்கவேண்டும். தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து 3 முறையும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை மாநில அமைச்சர் மா.சுப்பிரமணியன் 16 முறை சந்தித்தும் எய்ம்ஸூக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் ஆட்சியிலிருந்த அதிமுக அதற்காக வாய் திறந்தததுண்டா. அதிமுக என்கிற கட்சியும் சேர்ந்துதான் எய்ம்ஸ் திட்டத்தை கிடப்பில் போட்டிருக்கிறது. தமிழகத்திலுள்ள திட்டங்களை ஒழித்துக்கட்ட நினைக்கும் பாஜக நிதி ஒதுக்குவது சந்தேகம்.தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் மத்திய பாஜக அரசு வரும் 2024 மக்களவைத் தேர்தலில் தூக்கி எறியப்படவுள்ளது.

மத்தியில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி மீண்டும் வரப்போகிறது. மகத்தான எதிர்காலம் உருவாகப் போகிறது. அப்போது எய்ம்ஸ் திட்டத்தோடு, சேது சமுத்திர திட்டமும் சேர்ந்து நிறைவேற்றப்படும். பாஜக கூட்டணியை ஓட ஓட விரட்டும் நாள் நெருங்கி விட்டது. மத்தியில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் கூட்டணி கட்சிகளின் போராட்டமாக இது அமைந்துள்ளது” என்று அவர் பேசினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *