Loading

உஜ்ஜைன்: கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விரைந்து நலம் பெற வேண்டி சக இந்திய வீரர்களான சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உஜ்ஜைனில் உள்ள மகாகாளீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி நாளை நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மகாகாளீஸ்வரர் கோயிலுக்கு சூர்யகுமார் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் வந்துள்ளனர்.

“ரிஷப் பந்த் விரைந்து நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்தோம். அவரது கம்பேக் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பொறுத்த வரையில் தொடரை ஏற்கெனவே 2-0 என்ற கணக்கில் நாம் வென்றுள்ளோம். இறுதிப் போட்டியை எதிர்கொள்ள ஆவலுடன் உள்ளேன்” என சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.

2022, டிசம்பர் 30-ம் தேதி டெல்லி – டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்த போது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி இருந்த அவரை அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக மீட்டனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தில் அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்தது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது.

முதலில் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் சிகிச்சைக்காக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த வாரம் விரைவில் களத்தில் சந்திக்கலாம் என பந்த், ட்வீட் செய்திருந்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *