ஐதராபாத்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் இளம் இஷான் கிஷான் மீண்டும் களமிறங்க உள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கவுள்ளது. இந்திய அணிக்கு துவக்கம் தர கேப்டன் ரோகித், சுப்மன் கில் தயார். கோஹ்லி அபார ‘பார்மில்’ இருப்பது பலம். இலங்கை தொடரில் மூன்று போட்டியில் இரண்டு சதம் அடித்து அதிக ரன் சேர்த்த (283 ரன்) வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். ஒரு நாள் போட்டிகளில் ‘சூப்பர் மேனாக’ திகழ்கிறார். இதுவரை 46 சதம் அடித்துள்ளார். இத்தொடரில் மூன்று சதம் அடித்தால், ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் (49) அடித்தவர்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சினுடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளலாம்.
ஸ்ரேயாஸ் விலகல்
வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இளம் வயதில், அதிவேகமாக இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனை படைத்தார் இஷான் கிஷான். ஆனால், இலங்கை தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இம்முறை லோகேஷ் ராகுல் வெளியேற, இஷானுக்கு கதவு திறந்துள்ளது. துவக்க வீரரான இவர், இன்று ‘மிடில் ஆர்டரில்’ களமிறங்க உள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் முதுகுவலி காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதனால், சூர்யகுமார் யாதவ் இடம் உறுதியானது. ஹர்திக் பாண்ட்யாவும் இருப்பதால் ‘மிடில் ஆர்டர்’ வலிமையாக உள்ளது.
‘வேகத்தில்’ ஷமி, சிராஜ், உம்ரான் என மூவரும் அச்சுறுத்துகின்றனர். ஷாபஸ் அகமது, தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு ‘ஆல் ரவுண்டர்’ இடையே போட்டி நிலவுகிறது. இதற்குப்பதில், குல்தீப்– சகால் என வழக்கமான ‘சுழல்’ கூட்டணி தொடர்ந்தாலும் வியப்பில்லை.
அச்சுறுத்தும் கான்வே
நியூசிலாந்து அணி, பாகிஸ்தானை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. ‘ரெகுலர்’ கேப்டன் வில்லியம்சனுக்கு ‘ரெஸ்ட்’ தந்ததால், டாம் லதாம் அணியை வழிநடத்தவுள்ளார். கான்வே மீண்டும் அசத்த காத்திருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான 3வது போட்டியில் 42 பந்தில் 63 ரன் கடந்து ‘பினிஷராக’ திகழ்ந்த பிலிப்ஸ் தொல்லை தரலாம். ‘ஆல் ரவுண்டர்’ சான்ட்னர் கைகொடுக்கலாம். இஷ் சோதி காயத்தால் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார். ‘வேகத்தில்’ சவுத்தீக்கு ஓய்வு தந்ததால், பெர்குசனுக்கு சுமை அதிகரிக்கும்.
22
கடந்த 2010 முதல், இந்திய அணி சொந்த மண்ணில் 25 ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 22ல் கோப்பை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகிறது. இப்படி சொந்த மண்ணில் அசைக்க முடியாத இந்தியாவுக்கு நியூசிலாந்து நெருக்கடி தருவது சந்தேகம்தான்.
இதுவரை
இரு அணிகளும் இதுவரை 113 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இந்திய அணி 55 வெற்றி, 50 தோல்வி பெற்றுள்ளது. ஒரு போட்டி ‘டை’ ஆனது. 7 போட்டிக்கு முடிவு இல்லை. கடைசியாக, மோதிய ஐந்து போட்டிகளில் இந்தியா 3ல் தோல்வியடைந்தது. இரண்டில் முடிவு கிடைக்கவில்லை.
ஆடுகளம் எப்படி
ஐதராபாத் மைதான ஆடுகளம் ‘சுழலுக்கு’ சாதகமானது. இங்கு 2019ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் குல்தீப் 2, கேதர் ஜாதவ் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இம்மைதானத்தில் இந்திய அணி 6 ஒரு நாள் போட்டியில் தலா 3 வெற்றி, 3 தோல்வி பெற்றுள்ளது.
மழை வருமா
ஐதராபாத்தில் இன்றுவானம் தெளிவாக காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை.
1000
சுப்மன் கில் 18 இன்னிங்சில் 894 ரன்கள் எடுத்துள்ளார். இன்று 106 ரன்கள் எடுத்தால், ஒரு நாள் அரங்கில் அதிவேகமாக (19 இன்னிங்ஸ்) 1000 ரன்களை எட்டிய இந்திய வீரராகலாம்.
Advertisement