Loading

மதுரை: மதுரையில் இருந்து மாடுகளை கடத்தி தப்பிய, ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்டனர்.

ஹரியாணா உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த கும்பல் ஒன்று, மதுரை உள்ளிட்ட நகரங்களில் சாலையில் திரியும் மாடுகளை கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கடந்த வாரம் மதுரையில் இருந்து மாடுகளைக் கடத்திக் கொண்டு பரவை வழியாக லாரியில் செல்வது குறித்து, கூடல்புதூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, எஸ்ஐ தவமணி உட்பட 3 போலீஸார் பரவை மார்க்கெட் அருகேயுள்ள சோதனைச்சாவடியில் இரும்புத் தடுப்பு வேலியை வைத்து, அந்த லாரியைத் தடுக்க முயன்றனர். அப்போது, லாரி தடுப்பு வேலி மற்றும் தவமணி உட்பட 3 போலீஸார் மீது மோதிவிட்டு தப்பியது. இதையடுத்து கூடல்புதூர் காவல் ஆய்வாளர் மதுரைவீரன் தலைமையில் தனிப்படையினர் தேடி வந்தனர்.

மாநிலத்தில் பல்வேறு சோதனைச் சாவடி, சுங்கச்சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொள்ளாச்சி அருகே அந்த லாரியை 2 நாட்களுக்கு முன்பு போலீஸார் மடக்கி லாரியில் இருந்த கும்பலை பிடித்து விசாரித்தனர்.

இதில் பரவை மார்க்கெட் வழியாக லாரியில் மாடுகளை கடத்திச் சென்றவர்கள் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த நசீர்(22), இர்பான்(28), சேக்குல்(28), சிப்போலா(33), சாக்ரூதின்(42) எனத் தெரியவந்தது. இவர்களை கூடல்புதூர் போலீஸார் நேற்று கைது செய்தனர். லாரியை பறிமுதல் செய்தனர். ஆனால், மாடுகளை மீட்க முடியவில்லை.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *