Loading

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மக்களிடம் பராமரிப்பு கட்டணம் வசூலித்தும், மலைப்பாதைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் பக்தர்கள் மலை ஏறுவதற்கு சிரமப்படுகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்வதற்கு மலை அடிவாரமான தாணிப்பாறையில் இருந்து காட்டாறுகள், ஓடைகள், மலைகள் ஆகியவற்றைக் கடந்து கரடு முரடான மலைப்பாதையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இங்கு மாதம் தோறும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷ நாட்களில் மலையேறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

பிரதோஷ நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும், அமாவாசை பௌர்ணமி தினத்தன்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்கின்றனர். தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாலயா அமாவாசை, நவராத்திரி, சிவராத்திரி போன்ற விழா காலங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்வர். அவ்வாறு மலையேறி செல்லும் பக்தர்களிடம் வனத்துறை சார்பில் பராமரிப்பு கட்டணமாக ரூ.10 வசூல் செய்யப்படுகிறது.

ஆனால் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை பராமரிப்பு இல்லாமலும், அவசர காலங்களில் மக்களுக்கு உதவுவதற்கு ஆட்கள் இல்லாதாலும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாவட்ட நிர்வாகம், வனத்துறை, காவல்துறை, இந்து சமய அறநிலை துறை சார்பில் சதுரகிரி கோயிலுக்கு செல்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ”மலை ஏறுபவர்களிடம் இருந்து வனத்துறையினர் பராமரிப்பு கட்டணமாக ரூ.10 வசூல் செய்கின்றனர். முன்பு மலை ஏறிச் செல்லும் பக்தர்களுக்கு, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் நீர், மோர் உள்ளிட்ட உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். ஆனால் தற்போது அதற்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிப்பதில்லை.

மலைப்பாதையில் அடிவாரம் முதல் கோயில் வரை தற்காலிக கடைகள் அமைத்து தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்கின்றனர். மலைப்பாதையில் உள்ள குப்பை தொட்டிகள் பல சேதமடைந்துள்ளதால் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் சூழல் உள்ளது. மாங்கனி ஓடை அருகே வனத்துறை அறை கட்டுமான பணிக்கு பயன்படுத்திய சல்லி கற்களை பாதையிலேயே போட்டுள்ளனர்.

ஏற்கெனவே கரடு முரடான மலைப்பாதையில் பயணிக்கும் பக்தர்களுக்கு இந்த சல்லி கற்கள் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மலைப் பாதையில் நான்கு இடங்களில் வனத்துறை சார்பில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஒன்றில் கூட அலுவலர்கள் இருப்பதில்லை. பக்தர்களுக்கு ஏதாவது அவசரம் என்றால் கோயில் அல்லது அடிவாரம் சென்றால் தான் உதவி கிடைக்கும் சூழல் உள்ளது. இதனால் மலையேறும் பக்தர்களுக்கு உள்ள சிரமங்களை போக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *