India
oi-Mani Singh S
போபால்: 2047-ம் ஆண்டில் உலகின் பணக்கார நாடாக இந்தியா தான் இருக்கும் என்றும், மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கி ஆட்சியை பிடிக்க ராகுல் காந்தி விரும்புகிறார் என்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மத்தியபிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய ஜோடோ யாத்திரை கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக டெல்லி வந்து தற்போது காஷ்மீருக்குள் நுழைந்துள்ளது.
போர் மிரட்டல் விடுத்த சீனா.. களத்தில் சந்திக்க தயார்? பயிற்சியில் இந்தியா! எல்லையில் கடும் பதற்றம்!

ராகுல் காந்தி நடைபயணம்
ஜோடோ யாத்திரைக்கு இடையே கட்சியினரை சந்தித்து பேசுவது பொதுக்கூட்டங்களில் பேசுவது என ராகுல் காந்தி பரபரப்பாக இருக்கிறார். ராகுலின் இந்த ஜோடோ யாத்திரை தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் இருக்கும் என்று அவரது கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் ராகுல் காந்தி மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டவற்றையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

நாட்டின் பெருமையுடன் விளையாட வேண்டாம்
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது இறுதி கட்டத்தை எட்டி விட்டது. காஷ்மீரில் ஜோடோ யாத்திரையை பிரம்மாண்டமாக நிறைவு செய்ய காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகுல் காந்தியை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக ராஜ்நாத்சிங் பேசுகையில், “இந்தியாவின் கவுரவம் மற்றும் பெருமையுடன் விளையாட வேண்டாம். மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கி ஆட்சியை பிடிக்க ராகுல் காந்தி விரும்புகிறார்.

இந்தியா ஒருபோதும் இனி உடையாது
வெறுப்பை உருவாக்குவதன் மூலம் அதிகாரத்தை அடைய முடியாது. மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெறுவதன் மூலம் மட்டுமே அதை அடைய முடியும். இந்தியாவில் வெறுப்புணர்வு மேலோங்கி இருக்கிறது என சொல்வது நாட்டை இழிவுபடுத்தும் செயலாகும். 1947- ல் இந்தியா பிரிவினை சந்தித்து விட்டது. இந்தியா ஒருபோதும் இனி உடையாது. யார் வேண்டுமானாலும் இந்தியாவை உரிமை கொண்டாடும் காலம் எல்லாம் கடந்து விட்டது.

உலகின் பணக்கார நாடாக..
ராகுல் காந்தி இந்தியாவின் பிம்பத்தை சிதைக்காலம் இருந்தாலே போதும். இந்தியா தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது” என்றார். தொடர்ந்து பிரதமர் மோடியை பாராட்டி பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ”ஊழலை ஒடுக்க பிரதமர் மோடி இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கைகள் எடுத்து உள்ளார். அதன் காரணமாக இந்தியா உலகில் ஐந்தாவது பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. 2047 ஆம் ஆண்டு இந்தியா உலகின் பணக்கார நாடாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.
English summary
Union Defense Minister Rajnath Singh said in a program in Madhya Pradesh that India will be the richest country in the world in 2047 and Rahul Gandhi wants to create hatred among the people and seize power.
Story first published: Sunday, January 22, 2023, 22:22 [IST]