கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே நகைக் கடையின் சுவரில் துளையிட்டு, 30 பவுன் தங்க நகை மற்றும் 25 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சேகர் (52). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அனுமன்தீர்த்தத்தில் நகைக் கடை மற்றும் நகை அடமானக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கடையைப் பூட்டிவிட்டு சேகர் வீட்டுக்குச் சென்றார்.

விசாரணை நடத்திய போலீ ஸார்.
நேற்று காலை அவர் கடைக்கு வந்தபோது, கடையின் பின்புறம் சுவரில் துளையிடப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, கடையிலிருந்த 30 பவுன் தங்க நகைகள் மற்றும் 25 கிலோ வெள்ளிப் பொருட்கள், கண்காணிப்பு கேமரா பதிவு சாதனங்கள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். மேலும், மோப்ப நாய் ரேஷ்மி வரவழைக்கப்பட்டு, சோதனையிடப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.